நாங்கள் இறக்கும் தருவாயிலும் எமது பிள்ளைகளைத் தேடும் போராட்டம் தொடரும்… (அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்)

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயிர்ப்புப் போராட்டமொன்று சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி திருமதி த.செல்வராணி தலைமையில் திருக்கோவில் குடிநிலம் செல்வ விநாயகர் முன்றலில் இடம்பெற்றது.

 
இவ் ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் எனப் பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.
 
இதன்போது, தாயின் கண்ணீர்ப் பயணத்திற்கு முடிவு கொடு, பத்து மாதம் சுமந்த வயிறு பற்றி எரிகின்றதே எங்கள் பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும், என் விழிகள் மூடமுன் என் பிள்ளைகளைக் காண வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவண்;ணம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கருத்துத் தெரிவிக்கையில்,
 
நாங்கள் மன வேதனையுடன் வாழ்ந்த கொண்டிருக்கின்றோம் எமது தேடலுக்கு ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் இன்னும் வரவில்லை. எனவே எங்கள் வேதனைகளை சர்வதேச நாடுகள் கண்கொண்டு பார்த்து எங்களின் பிள்ளைகளை கண்டுபிடித்துத் தருமாறு வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம். எங்களால் போராட முடியாத நிலைமையிலும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் நாங்கள் இறக்கும் தருவாயிலும் எமது பிள்ளைகளைத் தேடும் போராட்டம் தொடரும்.
 
எங்கள் போராட்டம் ஆரம்பிக்கப்ட்டு பதினொரு வருடங்களாகின்றன ஆனால் இதுவரை இதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இனிவரும் சமூதாயத்திற்கு இவ்வாறான நிலைமை வந்துவிடக் கூடாது என்று தெரிவித்தனர்.
 
மேலும் இது தொடர்பில் சங்ககத்தின் தலைவி திருமதி த.செல்வராணி கருத்துத் தெரிவிக்கையில்,
 
எமது போராட்டம் பத்து வருடத்தைக் கடந்து பதினொராவது வருடத்தை எட்டி நிற்கும் இத்தருவாயில் எட்டு மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை இழந்து நிற்கின்றோம். எமது உறவுகளுக்கு என்ன நடந்திருக்கின்றது என்ற உண்மையையே நாங்கள் உலக நாடுகளிடம் கேட்டு நிற்கின்றோம்.
 
எமது பிள்ளைகள் அனைவரும் வலுக்கட்டாயமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், ஒப்படைக்கப்பட்டவர்கள், வாகனங்களில் இறக்கி எடுக்கப்பட்டவர்கள், வீடு வீடாய் சுற்றி வளைப்பில் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். இவர்கள் எங்களுக்கு மீள வேண்டும். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை எங்களுக்குத் தெரிய வேண்டும்.
 
சர்வதேச நீதிமன்றத்திற்கு எங்கள் பிரச்சினைகள் கொண்டு செல்லப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் எங்கள் வேதனைகளைக் கண்கொண்டு பாருங்கள். எங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நீதி வேண்டி நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். அனைத்துலக நாடுகளும் எங்களுடன் சேருங்கள்.
 
நாங்கள் இன்று எங்கள் பிள்ளைகள், கணவர், உறவுகளைத் தேடி நிற்கின்றோம். இந்த அவலம் யாருக்கும் வந்துவிடக் கூடாது. அனைவரும் எமது போராட்டங்களுக்கு வலுச் சேருங்கள். சர்வதேசமும், அனைத்துலக நாடுகளும் எங்கள் போராட்டத்திற்குத் தோள் கொடுத்து எங்கள் உறவுகளுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தாருங்கள் என்று தெரிவித்தர்.

Related posts