வவுணதீவு, நாவற்காடு பாரத் விளையாட்டு மைதானம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் கரங்களால் விளையாட்டு வீரர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பாரத் விளையாட்டு கழகத்தின் தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற, இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களும் கௌரவ அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராசா மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள், இந்த விளையாட்டு மைதானமானது, மட்டக்களப்பு வெபர் மைதான திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர அவர்களிடம் இந்த விளையாட்டு மைதானத்தை புனரமைப்பதற்கான முன்மொழிவினை வழங்கியதாகவும், மறு தினமே அமைச்சர் அவர்கள் இதனது அமைச்சின் பொறியியலாளரை நாவற்காடு கிராமத்துக்கு அனுப்பி, பிரதேச செயலகம் மூலம் மதிபீட்டினை பெற்று, இந்த மைதான புனரமைப்பிற்கென ரூபா 57 இலட்சம் நிதியினை ஒதுக்கி இருந்தார் எனவும் குறிப்பிட்டார்.
தாம் மாவட்டத்துக்கு வருகை தரும் அமைச்சர்களை சந்திப்பது இவ்வாறான எமது மக்களின் தேவைகளை அவர்களுக்கு தெரிவித்து எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காகவே அன்றி, சிலரைப்போல் பிரதி அமைச்சு பதவிகளை கேட்பதற்காக அல்ல எனவும் தெரிவித்தார்.
மேலும் தாம் அமைச்சர்களை சந்திப்பது, மக்கள் முன்னிலையிலேயே அன்றி சிலரைப்போல் திரைமறைவில் பிரதியமைச்சர் பதவிகளை கேட்பதற்காக அல்ல எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர், இப்பிரதேசத்தில் பல திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் இருக்கின்ற போதிலும், அவர்கள் தமது திறமைகளை மாகாண மட்ட இதேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதில்லை எனவும் கூடைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் முறையான பயிற்சிகளை பெற்று இந்த நாட்டிற்கும் ஊருக்கும் பெருமை சேர்ப்பதோடு, விளையாட்டில் தமது தொழில் தகைமைகளை உயர்த்தி அத்துறைகளிலேயே வேலை வாய்ப்புகளை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார். எதிர்வருகின்ற காலங்களில் பல சாதனையாளர் விளையாட்டு வீரர்களை காண வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.