கடும் இழுபறி நிலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சுமூகமான முறையில் நடைபெறும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இரணைதீவு மக்களுக்கு நேற்று (சனிக்கிழமை) உதவிப் பொருட்களை வழங்கிய அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘பல்கலைக்கழக மாணவர்களுடன் இது தொடர்பாக நான் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதுடன், முதலமைச்சருடன் இது குறித்துக் கலந்துரையாடுமாறும் அவர்களுக்குத் தெரிவித்திருந்தேன்.
கடந்த 3 வருடங்களாக மாகாணசபையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தி வருகின்றது. எனவே இது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசிப்பதே சிறந்தது எனவும் கூறியிருந்தேன்.
மேலும் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒரு பொதுக் குழுவொன்றினை அமைத்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்வது சிறந்ததாக இருக்கும்.
இந்த விடயத்தில் போட்டிபோடுவது சிறந்த விடயமல்ல. எனவே ஒரு பொது உடன்பாட்டிற்கு வருவதே நல்லது. எனவே இந்த நினைவேந்தல் நிகழ்வு சுமுகமான முறையில் இடம்பெறும் என நான் எதிர்பார்க்கின்றேன்’ என அவர் மேலும் தெரிவித்தார்.