இலங்கையில் தொடர்ச்சியாக 5 வருடத்திற்கு வாகன அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் பாவனையிலிருந்து நீக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வாகன பதிவு தொடர்பில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை நீக்குவதே இதன் நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.
வாகன அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் வாகன பரிசோதனைக்காக எழுத்து மூலமான பரீட்சைக்கென புதிய கணனி முறையொன்று அறிமுகப்படுத்தும் நிகழ்வு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர அலுவலத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயர் தொழிநுட்பத்துடனான நவீன முறையின் கீழ் விண்ணப்பதாரிகளுக்கு கணனி திரையை பயன்படுத்தி பதில் வழங்க முடியும். வாகன அனுமதி பத்திரத்திற்கான எழுத்து மூலமான பரீட்சைக்கென நாளாந்தம் 1000 விண்ணப்பதாரிகள் சமூகமளிக்கின்றனர்.
இதில் நாளாந்தம் வெரஹெர அலுவலகத்திற்கு 350ற்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். முதல் திட்டத்தின் கீழ் 39 மில்லியன் ரூபா செலவில் 143 கணனி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய நடைமுறையின் கீழ் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
பரீட்சை தொடர்பான பெறுபேறு திரையில் வெளிவருகின்றமை விசேட அம்சமாகும். சித்தியடைய தவறுவோருக்கான பரீட்சைக்கென வேறொரு நாள் அதே நேரத்தில் நடத்தப்படும்.
பரீட்சார்த்திகளுக்காக வழங்கப்படும் புள்ளிகளை மாற்றமுடியாது. அது தொடர்பில் மீண்டும் விசாரிக்க முடியும். அடுத்த வருடத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் 24 கிளைகளுக்கு இந்த வசதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.