(சா.நடனசபேசன் )
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோருகின்ற மாபெரும் பாத யாத்திரை நீதிமன்ற உத்தரவை மீறாத வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு மட்டு. சிவானந்தா மைதானத்தில் ஆரம்பமாகி மறுநாள் பிற்பகல் அம்பாறை கச்சேரியை வந்தடையும் என்று தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
கல்முனை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட இடங்களில் இப்பாத யாத்திரை நடத்தப்பட கூடாது என்று கல்முனை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்நிலையில் தமிழர் ஊடக மையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்று சனிக்கிழமை பெரியகல்லாற்றில் சந்தித்து பேசியபோதே மோகன் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக தரம் உயர்த்தி தரப்படாமலேயே வைத்திருக்கப்படுகின்றது. ஆயினும் இது தரம் உயர்த்தி தரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குள் தமிழர்கள் மாத்திரம் அன்றி முஸ்லிம், சிங்கள மக்களும் வாழ்கின்றனர். இம்மக்கள் அனைவரினதும் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு இது தரம் உயர்த்தப்பட வேண்டி இருக்கின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்படுவது வழமையாக இடம்பெற கூடிய அதிகார பரவலாக்கல் செயற்பாடு மாத்திரமே ஆகும். இதில் யாருக்கும் பாதிப்பு இருக்காது என்பதும் வெளிப்படையான உண்மையே ஆகும். அத்துடன் அதிகர பரவலாக்கலின் நன்மைகள் அஷ்டபுஷ்டியான முறையில் மக்களை வந்தடையும். சாய்ந்தமருது, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களுக்கு பிரதேச செயலகங்கள் பிரித்து கொடுக்கப்பட்டபோது யாரும் எதிர்க்கவே இல்லை. குறிப்பாக தமிழர்கள் எதிர்த்து இருக்கவில்லை.
ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்படுவதற்கு தொடர்ந்தேச்சையாக எதிர்ப்பு காட்டப்படுகின்றது .இப்பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவதை விரும்பாத சக்திகளே இது ஆயுதமுனையில் உருவாக்கப்பட்டது என்று கட்டுக்கதையை உருவாக்கி கட்டவிழ்த்து விட்டுள்ளனர். உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சராக இருந்த கே. டபிள்யூ. தேவநாயகம் இப்பிரதேச செயலகத்தை உருவாக்கி தர முன்னின்று உழைத்தவர் ஆவார். அதே போல கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் இருக்கின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் விடயத்தில் எவருடைய கைகளும் ஆயுத முனையில் கட்டப்பட்டு இருக்கவே இல்லை.
திட்டமிடப்பட்ட அரசியல் சதி காரணமாகவே அரசாங்கத்தால் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இன்னமும் தரம் உயர்த்தி தரப்படாமல் உள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டி பேசி உள்ளனர். ஜனாதிபதி தேர்தல் விரைவில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தரா விட்டால் தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகவே நிச்சயம் வாக்களிப்பார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் இந்த இடத்தில் சொல்லி வைக்கின்றேன்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தர கோரி மட்டு – அம்பாறை நோக்கிய நடை பேரணியை தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் சமூக போராளிகள் சுமார் 300 பேர் முதலில் மேற்கொள்ள முன்வந்தோம். ஆயினும் பல்லாயிர கணக்கான மக்கள் இப்பேரணியில் பங்கேற்க பேரார்வம் காட்டி முன்னால் வந்தனர். அதன்படி 7500 பேர் வரை இப்பேரணியில் பங்கேற்பார்கள் என்று விசுவாசிக்கின்றோம். இது ஒரு அமைதி பேரணியும், சமாதான யாத்திரையுமே ஆகும்.
ஆயினும் துரதிஷ்டவசமாக கல்முனை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட இடங்களில் இப்பேரணியை நடத்த முடியாதவாறு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாம் நீதிமன்ற உத்தரவை மதித்து, அதற்கு குந்தகம் ஏற்படாத வகையில் மட்டு – அம்பாறையை நோக்கிய எமது பேரணியை நிச்சயம் நடத்தி செல்வோம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கல்முனை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட இடங்களை தவிர்த்தவாறு எமது பேரணி முன்னோக்கி சென்று அம்பாறை கச்சேரியை வந்தடையும்.