பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சி.வி.க்கு தவராசா சவால்!

வடக்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடு தொடர்பான பகிரங்க விவாதத்துக்கு வருமாறு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வடக்கு மாகாண சபையின் எதிர்க்ட்சி தலைவர் சி.தவராசா அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக தவராசா இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“வடக்கு மாகாணத்தில், ஏறத்தாழ 12 இலட்சம் மக்களுக்கான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்நிலையில் அம்மக்களுக்கு நேர்மையுடனும், உண்மைத் தன்மையுடனும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு முதலமைச்சருக்கு உண்டு.

அதனை விடுத்து ஊடகங்களின் கேள்விக்குப் பதில், வாரத்துக்கொரு கேள்வி என்று, தானே கேள்வியைக் கேட்டு தானே பதிலளித்து கொண்டிருக்காமல் எம்மால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிக்க முடியுமாயின், அவரைப் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றோம்.

தற்போது மாகாண சபையில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக மட்டுமல்ல, கடந்த நான்கு வருடம் ஒன்பது மாதங்களாக மாகாண சபை செயற்பாடுகளில் வினைத்திறனின்மை தொடர்பாகவும் மக்களுக்கு பதிலளிக்கும் முகமாகவும் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி தொடர்பில் நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு தொடர்பில் ஆராயும் விசேட அமர்வொன்று கடந்த வாரம் இடம்பெற்றது. எனினும், அதில் பங்குகொள்ளாமல் புறக்கணித்துவிட்டு ஊடகங்களுக்கு மாத்திரம் அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருப்பதில் பயனில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts