கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தொடர்ச்சியாக மேற்கொண்ட நேரடி முய்ற்சியன் பலனாக கடந்த நான்கு தினங்களாகப் பூட்டப்பட்டு கிடந்த பனங்காடு பிரதேச வைத்தியசாலை மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளது.
பணிப்பாளர் டாக்டர் சுகுணன் நேற்று முன்தினம்(21)சனிக்கிழமை பிற்பகல் அரச வைத்திய அதிகாரிகள் சங்க அம்பாறை மாவட்டத்தலைவர் டாக்டர் எஸ்.எம்.மாஹிர் செயலாளர் டாக்டர் எ.எல்.எம்.மாஹிர் தாக்குதலுக்குள்ளான வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் ஷஹீல் மற்றும் உதவிபொலிஸ் அத்தியட்சகர் இராணுவஅதிகாரி உள்ளிட்டோர் அங்கு சென்று பிரச்சினையைதீர்த்ததுவைக்குமு கமாக கூட்டமொன்றை நடாத்தினார்.
அதில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
அனைவரின் சம்மதத்துடன் போலீசாரின் 24 மணிநேர பாதுகாப்புடன் வைத்தியசாலையை உடனடியாக பொதுமக்களுக்கு வைத்தியசேவைகளை வழங்குவதற்காக மீண்டும் திறக்கப்பட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
நான்கு தினங்களுக்கு முன் அலிக்கம்ப பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த சிலருக்கும் அங்கிருந்த வைத்தியருக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக அங்கு பணியாற்றும் வைத்தியஅதிகாரி தாக்கப்பட்டதனால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்கள் தாதிகள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பணிக்கு வராமை காரணமாக நான்கு நாட்களாக வைத்தியசாலை பூட்டப்பட்ட நிலையில் இருந்தமை தெரிந்ததே.
இது தொடர்பில் டாக்டர் சுகுணன் கருத்துரைக்கையில்:
வைத்தியரின் வைத்தியதுறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய கட்டாயம் என்மீது உள்ளது.அதேவேளை மக்களுக்கான சுகாதாரசேவை என்பதும் முக்கியமானது. அதனை மனதிற்கொண்டு சகலதரப்பினரையும் அணுகி இன்று இவ்வாறானதொரு முடிவுக்கு வந்தோம். ஒத்துழைத்த சகலருக்கும் நன்றிகள்.
வளத்தில் ஆரம்ப சுகாதார பிரிவாக காணப்பட்ட இந்த வைத்தியசாலையை பிரதேச வைத்தியசாலையாக மாற்றி பற்சிகிச்சைப்பிரிவு நவீன வைத்திய ஆய்வுகூடம் அத்துடன் இருமாடி கட்டிடத்தொகுதி என்பவற்றை ஏற்படுத்தி கொடுத்ததுடன் அந்த கட்டிடத்தொகுதிக்கு தேவைப்பட்ட மேலும் ஐந்து மில்லியன் ரூபாவை இன்று ஒதுக்கீடு செய்ததுடன் மகிழ்ச்சியுடன் அந்த ஏதுமறியா மக்களுடன் அளவளாவி விடைபெற்றேன். என்றார்.