கல்வி சுகாதாரத்தை விட பாதுகாப்பிற்கு இவ்வளவு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்ற விடயம் எங்கள் மத்தியில் பலவித அச்சத்தை ஏற்படுத்துகின்றது. தொல்பொருள் வனபரிபாலனம் என இராணுவத்தின் பின்னணியில் பல செற்பாடுகள் இடம்பெறுகின்ற. இவ்வாறான நிதி ஒதுக்கீடுகள் எமது பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளுக்குக் கையாளப்படுமோ என்ற அச்சம் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவிதுள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2022ம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவிற்காகவே பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டிலே கொவிட் தொற்று, பொருளாதார வீழ்ச்சி, மக்கள் மத்தியிலே பாரிய சுமை சுமத்திப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் இவ்வாறு பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்வது எந்தவகையில் நியாயம்? குறிப்பாக இந்த நாட்டிலே யுத்தம் நடைபெறுகின்ற போது ஒதுக்கப்படுகின்ற நிதியே தற்போதும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. இது ஏற்புடைய விடயம் அல்ல.
இந்த நாட்டிலே ஒரு பிரஜைக்கு கல்விக்காக 5253ரூபா 44 சதமும், சுகாதாரத்திற்காக 7042 ரூபா 61 சதமும் ஒக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை பாதுகாப்பிற்காக ஒரு தனி மனிதனுக்கு 22000 ரூபா வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நாட்டிலே யுத்தம் நடைபெற்றிருக்கின்றது. அதன் மூலம் பல பாதிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது பாதுகாப்பிற்கு இவ்வளவு பாரிய நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்ற விடயம் எங்கள் மத்தியில் பலவித அச்சத்தை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் யுத்தம் முடிந்த கையோடு எமது பிரதேசங்களில் பல விடயங்களை முன்னெடுக்கின்றீர்கள். குறிப்பாக தொல்பொருள், வனபரிபாலனம் என்ற அடிப்படையில் இராணுவத்தினர் பின்னணியில் பல செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான நிதி ஒதுக்கீடுகள் எமது பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளுக்குக் கையாளப்படுமோ என்ற அச்சம் உள்ளது.
இந்த நாட்டிலே வரிச்சுமையின் காரணமாக ஒவ்வொரு குடிமகனும் கடனாளியாகியுள்ள நிலையில் பாதுகாப்பிற்கு இத்தனை தொகையை ஒதுக்கீடு செய்வதை விட ஒரு குறிப்பிட்ட தொகையாவது இந்த நாட்டிலே கணவனை இழந்து வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்த முடியாமல் தத்தளிக்கின்ற அந்த உறவுகளுக்கு ஒதுக்கீடு செய்திருந்தால் உண்மையிலேயே நாங்கள் பாராட்டியிருக்கலாம்.
கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் அமைய அடிப்படையில் 920க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றார்கள். அவர்களுக்குரிய நிரந்த நியமனம் வழங்கப்படாதிருக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பழிவாங்குகின்ற செயற்பாடுகளையே செய்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு பணிபுரிகின்ற அந்த ஊழியாகள் மீதும் பழிவாங்கல்களைச் சுமத்தாமல் உள்ளுராட்சி சபைகளிலும் சிறந்த நிருவாகக் கட்டமைப்பினை உருவாக்க வேண்டும என்றால் உள்ளுராட்சி சபைகளில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும். அதனூடாவே அந்தப் பிரதேசத்தின் சுற்றம் சூழல் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும். குறிப்பாக தற்போதைய கொவிட் நிலைமைகளிலும் இந்த ஊழியர்களின் பங்களிப்பு அளப்பரியது. எனவே எதிர்காலத்தில் நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வரவு செலவுத் திட்டத்திலே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு 300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால், இந்த பன்னிரண்டு வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான நீதி இந்த நாட்டில் இற்றவரைக்கும் கிடைக்கப்படவில்லை. தறபோது மரண சான்றிதழ் சமர்ப்பித்தால் ஒரு குறிப்பிட்ட தொகை என்ற அடிப்படையிலே வழங்கப்பட்டுக் கொண்டிக்கின்றது.
இந்தப் பணத்திற்காக எமது உறவுகள் பேராடவில்லை. அவர்கள் இந்த நாட்டிலே ஒரு நியாயமான தீர்வு கிடைக்கப்பட வேண்டும், அவர்களுக்கு ஏற்பட்டு; இழப்பு இன்னுமொரு சந்ததிக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பனவற்றிற்காகவே போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஐநா வினூடாக பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஐநாவின் தீர்மானங்களை ஏற்று எந்தப் பணிகளையும் செய்யக் கூடிய ஒரு சூழலில் இந்த அரசாங்கம் இல்லை. ஐநா சொல்வது ஒன்று இந்த அரசு செய்வது ஒன்று. இந்த நாட்டில் உள்நாட்டுப் பொறிமுறையூடாக தீர்வுகளை வழங்க முடியும் என்று சொல்லுகின்ற இந்த அரசாங்கம் பன்னிரண்டு வருடங்களாக உள்ளகப் பொறிமுறையின் ஊடாக ஏதாவது தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறதா அல்லது போராட்டங்களுக்கு ஒரு தீர்வாவது கிடைத்திருக்கின்றாதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் அனைத்துலக சர்வதே சாசனத்தின்படி பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட எவ்வித தீர்வுகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
1980ல் இருந்து 2009 வரையான காலப்பகுதியில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை காணமலாக்கப்பட்டிருக்கின்றாhர்கள். 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே 146700 பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். எமது உறவுகளின் போராட்டமென்பது இந்த நாட்டில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும். சர்வதேசம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு எமக்குக் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இடம்பெற்றது. 70 வருடமாக எமது இனம் சந்தித்த இழப்புகளும் பாதிப்புகளும் எந்த அரசாங்கத்தினாலும் ஈடு செய்யப்பட முடியாதவையாகும்.
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் மரணச் சான்றிதழ் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் பின்னணி என்ன? இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் மரணித்து விட்டார்களா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறாயின், நியாயபூர்வமான தீர்வு இந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகளாக ஏனைய சமூகத்தைப் போன்று சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம்.
எமது சமூகம் சலுகைகளுக்குச் சோரம் போன சமூகம் அல்ல. தமது உரிமைக்காக போராடுகின்ற இனம். ஒரு நிலையான சமாதானம் சமத்துவம் இந்த நாட்டிலே நிலைநிறுத்தப்பட வேண்டும். தங்களுடைய எதிர்கால சந்ததியினர் கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட அழிவைப் போன்றதொரு அழிவைச் சந்திக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே எமது உறவுகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
சுதந்திரத்தின பின் எமது சமூகம் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். குறிப்பாக கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் ஆரம்ப காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 81 வீதமான தமிழர்கள் இருந்திருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் 74.5 வீதமான தமிழர்கள் இருந்திருக்கின்றார்கள். ஆனால் இந்த நாட்டிலே ஆட்சிக்கு வந்த பெரும்பான்மைத் தலைவர்கள் திட்டமிட்ட குடியேற்றங்களை ஆரம்பித்து இனப்பரம்பலை மாற்றினார்கள். கந்தளாய், விவசாயக் குடியேற்றம், அல்லை குடியேற்றம், மொரவை, மகா திபுல, பதவியா திட்டம் என்றும் பல குடியேற்றங்களை ஆரம்பித்து அந்தப் பிரசேங்களில் தமிழர்களின் செறிவைக் குறைத்து அடுத்த கட்டமாக கிழக்கு மாகாணம் பூராகத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இன்று அம்பாறை மாவட்டத்திலும் எங்களது இனத்தின் செறிவு குறைக்கப்பட்டிருக்கின்றது. தற்போது கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் செறிவு வெறுமனே 39 வீதமாக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டிலே மாறி மாறி வந்த அரசங்கம் எதுவும் தமிழர்களைப் பாதுகாக்கும் வகையிலும், இந்த நாட்டில் சமாதானம் எற்படும் விதத்திலும் கையாளவில்லை. இன்று ஒவ்வொரு சமூகமும் மாவட்ட ரீதியில் இனரீதியான பரம்பலை அதிகரிக்க வேண்டும். அந்த மாவட்டங்களை ஆள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த கொடிய யுத்தம காரணமாக எமது மக்கள் இன்று அகதிகளாக இந்தியாவில் இருக்கின்றார்கள். ஆனால் ஒரே நாடு ஒரே சட்டம், ஐக்கிய இலங்கை என்று மார்தட்டிக் கூறுகின்ற இந்த நாட்டின் தலைவர்கள் இந்த நாட்டில் இருந்து அகதிகளாகச் சென்ற மக்களை மீள இந்த நாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எந்த அடிப்படை வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. எமது மக்கள் அங்கு மிக மோசமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு அந்த மக்கள் வரவேண்டும் என்று குறிப்பிட்டாலும் நிதி செலுத்த வேண்டும், இங்கு வருகின்ற போது அவர்களுக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதி என்பவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இந்த அரசாங்கம் தயார் இல்லை. அது தான் மனவேதனையான விடயம் என்று தெரிவித்தார்.