தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தனை விடுவிக்குமாறு கோரி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இன்று (திங்கட்கிழமை) காலை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வெள்ளை ஆடை அணிந்து வாயில் கறுப்பு துணிகளைக் கட்டியவாறு காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
பிள்ளையான் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, அவரை சுயமாக ஜனநாயகப் பாதையில் ஈடுபட வழிவிடுமாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், உப தலைவர் நா.திரவியம், கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.