நாட்டுக்குத் தற்போதைய தேவை புதிய அரசியலமைப்பேயன்றி ஜனாதிபதி தேர்தல் அல்லவென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்புக் கொள்கை அதிகாரியான ரிக்கார்டோ செலரியுடனும் அரசியல், வர்த்தகம், தொடர்பாடலுக்கான பிரதித்தலைவர் ஆன்வாகியர் சட்டர்ஜி ஆகியோருடனும் நடத்திய சந்திப்பின்போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
1994 ஆம் ஆண்டிலிருந்து நாட்டுமக்கள் தொடர்ச்சியாக 25 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகவே தேர்தல்களில் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதானது மக்கள் ஆணையை மீறுகின்ற ஒரு கபடச்செயலாகும். எனவே, மக்கள் ஆணையை மீறுகின்ற இந்த நடவடிக்கையில் பங்கேற்பதா இல்லையா என்பதே தற்போது ஆராயப்பட வேண்டிய விடயம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் 90% மக்கள் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாகவே வாக்களித்திருக்கிறார்கள். அதன் விளைவாகப் பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்திற்குப் பிறகு புதிய அரசியலமைப்பு தொடர்பாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் பல்வேறு தீர்வுத் திட்டங்களும் முன்மொழியப்பட்டன. எனினும் அவற்றுள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே, நாட்டுக்கு இன்றைய தேவை புதிய அரசியலமைப்பேயன்றி ஜனாதிபதி தேர்தல் அல்லவென்று சம்பந்தன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.