புது யுகத்திற்குள் கல்முனை ஆதாரவைத்தியசாலை:வெளிநோயாளர் பிரிவு டிஜிட்டல் கணணி மயம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு டிஜிட்டல் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அங்குரார்ப்பண வைபவம் நேற்று சுகாதாரமுறைப்படி நடைபெற்றது.
 
நடைபெற்றுவரும் புதிய செயற்பாடுகளில் ஒன்றாக வைத்தியட்சகர் இரா.முரளீஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதி வைத்தியட்சகரும் சுகாதார கல்விப்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியுமான டொக்டர். சோமசூரியம் திருமாலின் நெறிப்படுத்தலில் வெளிநோயாளர் பிரிவின் சிகிச்சைகள் மற்றும் நோயாளர்கள் தொடர்பான விபரங்கள் புதிய தகவல் தொழில்நுட்பத்தின் கீழ் ஆவணப்படுத்தப்படுகின்றது..
 
இத்திட்டம் சுகாதார திணைக்களத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் டொக்டர் எஸ். சிறிதரனின் உதவியுடன் டொக்டர். அணில் சமரநாயக்க ( தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் சுகாதார திணைக்களம்) ஒத்துழைப்புடன் இத்திட்டம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
வைத்தியட்சகர் இரா.முரளீஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள் நேரடியாகவும் கொவிட் சூழ்நிலை காரணமாக சுகாதார திணைக்கள முக்கியஸ்த்தர்கள் ணுழுழுஆ  செயலி மூலமும் பங்குபற்றி உரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
இந் நிகழ்வுக்கு டொக்டர். நடராசா ரமேஸ் ( சுற்றாடல் தொழில் சுகாதார வைத்திய அதிகாரி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை) கல்முனை ஆதார வைத்தியசாலை திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி டொக்டர் ஜே.மதன் மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
 
கொரோனா தடுப்பு செயல்பாடுகளின் அடுத்த அங்கமாக வெளிநோயாளர் பிரிவு
டிஜிட்டல் கணணிமயமாக்கல் நடவடிக்கைக்கு சுகாதார அமைச்சின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிதி  வழங்கி இன்று நடை முறைப் படுத்தியுள்ளதுடன் இந்நிகழ்வின் ஆரம்ப விழாவினை சுகாதார அமைச்சின் உத்தியோக பூர்வ முகப் பக்கத்தில் இட்டு வைத்தியசாலையின் சேவையை கௌரவப் படுத்தியுள்ளனர். இதற்கு முன்னின்று உழைத்த டொக்டர் சோ.திருமால்  அவருடைய குழுவினரிற்கு வைத்திய அத்தியட்சகர் பாராட்டை தெரிவித்ததுடன் இச் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய வைத்திய சாலையின் அனைத்து பிரிவுகளுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
 
இந் நிகழ்வை இதய நோய்ப்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எல். கமல்ராஜ் தொகுத்து வழங்கினார்.

Related posts