புல்லுமலையில் தண்ணீர் உறுஞ்சி போத்தலில் குடிநீராக மாற்றி விற்பனை செய்வதற்காக ஆரம்பிக்கப்படும் தொழில்சாலையை நிறுத்தவேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை அந்த தொழிற்சாலை புல்லுமலையில் அமைப்பது பொருத்தமற்றது என்பதை தமிழ்தேசியகூட்டமைப்பு தெட்டத்தெளிவாக பலமுறை வெளிக்காட்டியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
புல்லுமலை தண்ணீர் தொழில் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்தக்கோரி எதிர்வரும் 07/09/2018,ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் ஹர்தால் போராட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குமா என ஊடகவியலாளர் கேட்டபோது மேலும் கருத்து கூறுகையில்
புல்லுமலையில் அப்பகுதி மக்களின் சம்மதம் இன்றி தன்னிச்சையாக ஒருவர் குடிநீர் தயாரிக்கும் தொழில்சாலையை நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் முன்எடுத்த சகல கவன ஈர்ப்பு போராட்டங்களிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் கிழக்கு மகாணசபை உறுப்பினர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளோம்.
எந்த ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்திலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமல் விட்டதில்லை அப்படி இருக்க சிலர் தமிழ்தேசிய கூட்டமைப்பு புல்லுமலை தண்ணீர் தொழில் சாலை அமைப்பதற்கான போராட்டங்களில் கலந்து கொள்ளாத விதமாக பிரசாரங்களை முன்எடுப்பதும் சமூக வலைத்தளங்களில் பிழையான கருத்துக்களை வெளியிடுவதும் வேதனை அளிக்கிறது.
மட்டக்களப்பில் மூன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் இவர்களில் எல்லோருமே புல்லுமலையில் குடிநீர் தொழிற்சாலை அமைப்பதை மனதார எதிர்த்து போராட்டங்களில் ஈடுபடுவதும் அதை தடுப்பதற்கான முயற்சிகளில் இன்றுவரை முயற்சிப்பதும் கண்கூடு அதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் அனைவரும் இதை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாய் உள்ளனர்.
ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நோக்கில் விசமத்தனமான பிரசாரங்களை புல்லுமலை தொழில்சாலையை முன்நிறுத்தி மேற்கொள்வதை காணமுடிகிறது இவ்வாறான தவறான பிரசாரங்களை முன்எடுத்து தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்களை கட்டவிழ்த்துள்ளனர்.
எதிர்வரும் செப்டம்பர் 7,ம் திகதி புல்லுமலை நீர் உற்பத்தி தொழிற்சாலையை நிறுத்தக்கோரி முழுநாள் பூரண ஹர்தால் நடத்துவதாக மட்டக்களப்பில் பல பொது அமைப்புக்கள் அழைப்பு விட்டுள்ளன அந்த செயல்பாட்டுக்கு நாமும் ஆதரவு வழங்க தயாராகவுள்ளோம் இதுதொடர்பாக எமது தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ச.வியாளேந்திரன் மற்றும் சீ.யோகேஷ்வரன் இருவரும் தெளிவாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர் என்பதை ஞாபகப்படுத்துகின்றேன்.அதைவிட ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் எழுத்து மூலமாக இந்த தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரி தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பாக நேரடியாக முறையிட்டுள்ளார் இவை எல்லாமே தமிழ்தேசிய கூட்டமைப்பின் முயற்சிகள் என்பதை புரிந்து கொள்ளாமல் ஏதோ தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரை புல்லுமலை குடிநீர் தொழிற்சாலை சம்மந்தமாக எதுவுமே செய்யவில்லை என கூறுவது வேடிக்கையான செயலாகும்.
புல்லுமலையில் குடிநீர் தொழிற்சாலையை முற்றாக மூடும்வரை தமிழ்தேசிய கூட்டமைப்பு நடவடிக்கைகள் தொடரும் இதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை எனவும் மேலும் தெரிவுத்தார்.