பெண் ஊழியருக்கு ஓங்கிஅறைந்த சம்பவத்தால் பரபரப்பு பதட்டம்!பாதிக்கப்பட்ட பெண்ஊழியர் 3 நாட்களாக வைத்தியசாலையில்;;..

பெண் ஊழியரொருவருக்கு அவரது  தலைமை உத்தியோகத்தர் ஓங்கி அறைந்த சம்பவத்தால் பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது.
இச்சம்பவம் நிந்தவூரில்  புதனன்று 1ஆம் திகதியன்று நண்பகல் 1மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
நிந்தவூர் கமநல கேந்திரமத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர் திருமதி தவப்பிரியா சுபராஜ்(வயது34) என்பவருக்கு அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஜ.எல்.ஏ.கார்லிக் என்பவர் கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவமே இப்பரப்புக்குக் காரணமாகும். இதுஒருவிதமான பதட்டத்தையும் தோற்றுவித்துள்ளது.
நாவிதன்வெளி சவளக்கடையைச்சேர்ந்த திருமதி தவப்பிரியா சுபராஜ் அண்மையில் திருமணமானவர். தச்சுத்தொழில்புரியும் சுபராஜ் என்பவரை திருமணம்செய்து சங்கீத் எனும் 1வயதுப்பிள்ளையுமுள்ளது. 
 
இச்சம்பவம் புத்தாண்டு பிறந்த முதலாந்திகதியன்று நண்பகல் 1மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக சம்மாந்துறைப்பொலிசில் அன்று மாலை 5மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர்அவர் வலிதாங்கமுடியாது கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கல்முனைஆதாரவைத்தியசாலையின்பெண்கள் வார்ட் 3இல் 17ஆம் இலக்க கட்டிலில் இன்று(3) வெள்ளிக்கிழமை 3வது நாளாக சிகிச்சை பெற்றுவரும் தவப்பிரியாவை காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரில் சென்று பார்வையிட்டார்.
 
பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் திருமதி தவப்பிரியா தெரிவிக்கையில்:
 
முதலாந்திகதியன்று புத்துணர்ச்சியுடன் கடமைக்கு காலையில் சமுகமளித்திருந்தேன். ஜனாதிபதியின் பணிப்புரைக்கிணங்க காலை 9.02க்கு நடைபெறவேண்டிய அரசஊழியர்களின் புத்தாண்டு உறுதியுரை காலையில் நடைபெறவில்லை.
 
நண்பகலைத்தாண்டி ஒரு மணியளவில் உறுதியுரை வைபவத்திற்காக எமது நிலையத்தலைவர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கார்லிக் எங்களை அழைத்தார்.
நாம் முகாமைத்துவ உதவியாளர்களாக  கடந்த 5வருடங்களாக சேவையாற்றிவருகிறோம். அவர்அழைத்ததும் மகிழ்ச்சியுடன் சென்றோம்.
 
ஆனால் அங்கு தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. தேசிய கீதம்இசைக்கப்படவில்லை. மௌன அஞ்சலி செலுத்தப்படவில்லை. உறுதியுரைகூட வாசிக்கப்படவில்லை.
எங்களை நிறுத்திவைத்து புகைப்படத்திற்காக கையை நீட்டி வாயை அசையுங்கள் என்றார். படம் எடுத்தார்கள். பின்பு மறுபக்கத்தால் படம் எடுப்பதற்காக வாயை அசையுங்கள். என்றார் எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தோம்.
 
மறுகணம் அவர் பாய்ந்துவந்து எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ஏனையோர்முன்னிலையில் பெண்ணான எனக்கு அறைந்தது பாரிய அவமானத்தை ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல் பாரிய வலியும் ஏற்ப்பட்டது. செவிப்பறை வெடித்துவிட்டதாக உணர்ந்தேன்.
எனக்கு அழுகை வந்துவிட்டது. அழுதுஅழுது இருந்தேன். அதற்கிடையில் யாரோ எனது கணவருக்கு அறிவிக்க அவரும் வந்துபார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்.ஆத்திரப்பட்டார். ஆனால் எதுவுமே கேட்காமல் 
 என்னை நேராக சம்மாந்துறைப்பொலிசுக்குக் கூட்டிக்கொண்டுபோய் முறைப்பாடு செய்தார். அப்படியே வந்து கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்தார்.
எனக்கு தற்போதும் அப்பகுதி கடுப்பாக இருக்கிறது. இடையிடையே தலைவலி தலைச்சுற்றுமயக்கம் வருகிறது. பால்குடி மறவாத எனது குழந்தைக்கு பால்கொடுக்கமுடியாது புத்தாண்டில் ஆஸ்பத்திரியில் வந்து படுத்துக்கிடக்கிறேன். வேதனையாகவுள்ளது.
 
சம்மாந்துறைப்பொலிஸ் ஒருவர் நேற்று(2) எமது அலுவலகத்திற்கு வந்து எம்முடன் பணியாற்றுகின்ற ஒரு உத்தியோகத்தரிடம் வாக்குமூலம் எடுத்துச்சென்றதாக அறிந்தேன். ஆனால்என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த உத்தியோகத்தரை பொலிசார் இன்னும் கைது செய்யாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
 
சுகமானாலும் நான் அங்கு செல்லமாட்டேன்.அவர் அதிகாரி அல்ல ஒரு சர்வாதிகாரி  போலஅராஜகம் நடாத்துகிறார். அச்சமாகஉள்ளது. அவமானப்பட்டுள்ளேன். எனக்கு நீதி வழங்கவேண்டும். என்றார்.
 
வைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரனிடம் கேட்டபோது : 
 
எமது 3வது பெண்வார்ட்டில் தாக்குதல்சம்பவம் காரணமான 1ஆம் திகதியன்று மாலை ஒருபெண்மணி அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் அறைந்த அறையால் பெண் ஊழியரது செவிப்பறை வெடித்துள்ளதா இல்லையா என்பதை வைத்தியப்பரிசோதனைதான்  உறுதிசெய்யவேண்டும்.அதன்பின்னர் சட்டவைத்திஅதிகாரியின் மருத்துஅறிக்கையும் பெறப்படவிருக்கிறது. அதன்பின்பே எதுவும் கூறமுடியும். என்றார்.
 
இதேவேளை இச்சம்பவத்தை கேள்வியுற்ற மனிதஅபிவிருத்தித்தாபன பெண்கள் அமைப்பான வேள்வி அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் ஆணாதிக்கத்திற்கு பலியாகியுள்ள பெண்உரிமை தொடர்பான  இந்தச்சம்பவத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.
 
உடனடியாக பெண்ணுக்கு கைநீட்டி ஓங்கிஅறைந்த அந்த ஆண் கைதுசெய்யப்படவேண்டும்.சட்டம் தன் கடமையைச்செய்யவேண்டும் நீதிவழங்கவேண்டும். இன்றேல் திங்களன்று ஆர்ப்பாட்டத்திற்கும் வேலைநிறுத்தத்திற்கும் தயாராகப்போவதாக அவை சூளுரைத்திருக்கின்றன.
 
பெண்மணியைப் பார்வையிட்ட தவிசாளர் கே.ஜெயசிறில் கூறுகையில்:
 
இது அப்பட்டமான பெண்மனித உரிமை மீறல். பெண்உரிமை அமைப்புகள் பல என்னிடம் கேட்டன. அவர் வழங்கிய வாக்குமூலத்தை கொடுத்துள்ளேன். பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸ்மாஅதிபர் தொடக்கம் சம்பந்தப்பட்ட திணைக்கள உயரதிகாரி அமைச்சர் ஜனாதிபதி வரை இப்பிரச்சினைதொடர்பாக முறையிடவுள்ளேன்.
 
அவர் எந்த அதிகாரியாகவிருந்தாலும் ஒரு பெண்ஊழியருக்கு கன்னத்தில் அறைவதற்கு எந்த உரிமையும்இல்லை. கட்டிய கணவனுக்கே உரிமையில்லாதபோதுஇவர் எப்படி அறைவார்? சட்டம் பேசவேண்டும்நீதி கிடைக்கவேண்டும். இல்லாவிடில் இதனை விடமாட்டேன்.
 
ஜனாதிபதியின்அறிவுரைக்கிணங்க வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கிணங்க எதுவுமே செய்யாமல் ஒப்புக்கு பிழையான வழியில் உறுதியுரையை ஏற்கும் அந்தவேளையில் இத்தாக்குதல் சம்பவத்தை நடாத்தியிருப்பது ஜனாதிபதியை அவமதிக்கும் செயலாகும் ஆண்வர்க்கத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகவும் பார்க்கிறேன். 

Related posts