பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு மக்களையும் நேரில் சென்று சந்தித்து குறைகள் தேவைகள் தொடர்பாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கேட்டறிந்தார்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை மக்களுடன் மாபெரும் கலந்துரையாடலில் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை ஈடுபட்ட பின்னர் அருகில் உள்ள பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு பகுதிக்கு சென்றிருந்தார்.
இதன் போது அப்பகுதி மக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இரவு அப்பகுதிக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.இதன் போது அங்கு நின்ற பொதுமக்களுடன் உரையாடிய பின்னர் அங்கு தனது கருத்தை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இத்தொடர்மாடி வீட்டுத்திட்டம் பல குறைகளுடன் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருப்பது கவலைக்குரியது.இங்கு வாழும் மக்கள் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றதை நேரடியாக நான் பார்த்தேன்.இந்த தொடர்மாடி குடியிருப்பு வீதிகள் குன்றும் குழியுமாகக் காணப்படுவதை ஏற்க முடியாதுள்ளது.எதிர்வரும் சில தினங்களில் முதற்கட்டமாக பல உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன். மழை காலங்களில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக இங்குள்ள பொதுமக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
இவ்விஜயத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர், கொள்கை பரப்பு செயலாளர், முன்னாள் போராளிகள் மற்றும் மக்கள் நலன் பேணல் பொறுப்பாளர் வரதா அவர்களுடன், பெரியநீலாவணை மஹாவிஷ்ணு ஆலய பிரதம குரு நிரோஜசர்மா, மற்றும் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளான ஜெகநாதன், வரதராஜன் ஆகியோரும் பெருமளவான இளைஞர்களும், பொதுமக்களும் பங்குபற்றியிருந்தனர்.
கலந்துரையாடலை தொடர்ந்து பெரியநீலாவணை தமிழ் பிரிவுக்கானதும் பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மைதானத்திற்குமான காணி தனியாரால் சுவிகரிக்கப்படுவது தொடர்பாக தெரிவிக்கப்ட்டதையடுத்து குறித்த காணியையும் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.