பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத நிலையில் ஒருவர் பிரதமராகவோ அவரது அரசாங்கம் பதவியிலிருப்பதோ அரசியலமைப்புக்கு முரணானதாகும் என்பதுடன் அது சட்டத்திற்கும் முரணானது என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்பகரமான நிலைமையையடுத்து பாராளுமன்றக் கட்டிடத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே சம்பந்தன் எம். பி. இவ்வாறு தெரிவித்தார்.
அத்தகையவர்கள் தமது பதவிகளைத் துறக்காவிட்டால் அவர்கள், ஜனநாயக விரோதிகளாகவே கருதப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
மஹிந்த ராஜபக்ஷ தமது ஜனநாயகக் கடமையை அவர் நிறைவேற்றவில்லை. பாராளுமன்றத்துக்கு வந்து தமக்குப் பெரும்பான்மை இருப்பதை அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார்.
அதற்கு மாறாக சக உறுப்பினர்களுக்குப் பதவிகள் வழங்கப்பட்டதுடன் பணம் வழங்கப்பட்டு உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதற்கு தீவிரமான முயற்சிகள் இடம்பெற்றன. இது இந்த நாட்டிலுள்ள அனைவரும் அறிந்ததே. அவ்வாறு செயற்பட்ட போதும் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமற் போனது. அவசியமான 113 உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு அவர்கள் தவறிவிட்டனர். அதனால் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை வெளிக்கொணர வேண்டும் என்ற நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து 14ம் திகதி நிறைவேற்றினார்கள். அதனையடுத்து பாராளுமன்றத்தில் அப்போது நிலவிய அமைதியின்மையால் குரல் மூலமான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு உரிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஆம்! அல்லது இல்லை! என குரலெழுப்பப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்து ஒரு படடியலைத் தயார் செய்து கையொப்பமிட்டு அதனை சபாநாயகரிடம் கையளித்தனர். அது அனுப்பப்பட வேண்டிய இடத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
15ம்திகதி மீண்டும் பாராளுமன்றம் கூடிய போது மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். எனினும் அந்த உரை மீது பாராளுமன்றத்துக்கு நம்பிக்கை இல்லை மற்றும் அவர் மீதும் நம்பிக்கை கிடையாது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவையனைத்தும் குரல் மூலமான வாக்கெடுப்பின் மூலமே இடம்பெற்றன.
இதற்கிணங்க நேற்று பாராளுமன்றம் கூடிய போது சபைக்குள் சபாநாயகரை வர விடாமல் தடுத்து அவரது ஆசனத்திலும் அமர்ந்து அதனைச் சுற்றி வளைத்து குழப்பம் ஏற்படுத்தினர்.
சபாநாயகர் தாமதமாகவே சபைக்குள் பிரவேசித்தார். பாதுகாப்புடன் அதே தீர்மானம் மீண்டும் சபையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கிணங்க பாராளுமன்றத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவரது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என தெரிவித்து மீண்டும் சபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் அது மூன்றாவது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற தீர்மானத்திற்கமைய இதன் மூலம் அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார். அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றார்.