பொதுமுடக்கம் காரணமாக தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி : மக்கள் ஒத்துழைத்தால் விரைவில் தொற்றை கட்டுப்படுத்தலாம்

கொரோனா ஆரம்பித்த சீனா, இலங்கையில் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட பெலியகொட கிழக்கில் அக்கரைப்பற்று என கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக மீன்சந்தைகளிலையே அடையாளம் காணப்பட்டனர். அந்த வரிசையில் மாளிகைக்காடு பிரதேச மீன்சந்தையும் இணைந்து கொள்ள கூடாது என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். மாதக்கணக்கில் பாவித்த முகக்கவசங்களுடன் சிலரும், முகக்கவசங்களை ஒழுங்கான முறையில் அணியாமல் சிலரும் சந்தைகளில் உலாவித்திரிவது பாரிய ஆபத்தை பொதுமக்களுக்கு உண்டாக்கும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் கவலை தெரிவித்தார்.
 
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், இதுவரை கல்முனை பிராந்தியத்தில் 6800 பேரளவில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 157 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 50க்கும் குறைவானவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒரு இறப்பு சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது இதன்மூலம் பிராந்தியத்தில் பாதுகாப்பான தெளிந்த நிலை உள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்த நிலை பொதுமுடக்கம் அமுலில் உள்ளதனால் கிடைத்த பெறுபேறாகவே நோக்க முடிகிறது. பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினால் அதனால் உண்டாகும் பாதிப்பின் எதிரொலியை காணலாம்.
 
கல்முனை பிராந்தியத்தில் 500 கொரோனா தொற்றாளர்கள் அளவில் இப்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் 100 பேர் வைத்தியசாலையிலும், இன்னும் 100 பேர் இடைத்தங்கல் நிலையங்களிலும் மேலும் 300 பேரளவில் வீடுகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி ஏற்ற தகுதியானோரில் 95 சதவீதமானோர் முதலாவது தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஏனையோருக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் நடமாடும் முறையில் இடம்பெற்று வருகிறது. இரண்டாம் தடுப்பூசியை இதுவரை 75 சதவீதமானோர் பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஏனையோருக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 
கடந்த ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை சரியான பொறிமுறையொன்றை நிறுவி மீளத்திறக்க அரச உயர்மட்டத்தில் பல்வேறு கலந்தாலோசனைகள் இடம்பெற்று வருகிறது. நாட்டின் பொருளாதாரம், கல்வி, வர்த்தகம், தொழிற்சாலைகள் என்பன விரைவாக சாதாரண நிலைக்கு திரும்ப தங்களின் முழு அர்ப்பணிப்பை சுகாதாரத்துறை வழங்கிவருகிறது. ஏனைய துறையினரும் பொதுமக்களும் தமது முழு ஒத்துழைப்பை வழங்கினால் நாம் கொரோனா தொற்றை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார்.

Related posts