பட்டிருப்புக்கு வருகின்ற அபிவிருத்திகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடை செய்கின்றார்கள் என மிக வடிகட்டிய பொய்யொன்று அண்மைக் காலங்களில் பரப்பப்பட்டது. பொய்வியாபார அரசியல் செய்ய வேண்டிய எண்ணம் எங்களுக்கு இல்லை. பட்டிருப்புக்கு வருகின்ற அபிவிருத்திகளைத் தடை செய்வதற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை. நம்மவர்கள் சிலர் இவ்வாறு மக்களை ஏமாற்றி, பொய் கூறி எமது மக்களின் வாக்குகளைப் பெற்று வேறு யாரோ ஒருவரை அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினர்களாக உருவாக்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கம்பெரலிய திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அரசடித்தீவு பாடசாலை வீதி 03 குறுக்கு வீதி இரண்டு மில்லியன் செலவில் கொங்கிறீற்று வீதியாகப் புனரமைப்புச் செய்யப்பட்டதுடன் அரசடித்தீவு விநாயக் அலய புனரமைப்பிற்காக மூன்று லெட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டது.
புனரமைப்புச் செய்யப்பட்ட வீதியினைத் மக்கள் பாவனைக்காகத் திறந்து கையளிக்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்தி என்ற விடயத்தில் அரசியல் செய்வதற்கு நாங்கள் வரவில்லை. ஆனால் சிலர் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கின்றது. இந்த அரசடித்தீவு கிராமம் பல செல்வச் செழிப்போடு இருந்த கிராமம். இந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் பல பின்னடைவுகளை அடைந்த கிராமமாக இருக்கின்றது. எனவே இந்தக் கிராமத்தின் அபிவிருத்தி என்ற விடயத்தில் நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு மிகவும் அக்கறையாக இருக்கின்றோம். இந்தக் கிhமம் மாத்திரம் அல்ல எமதுமக்கள் வாழும் பிரதேசங்கள் அனைத்தின் அபிவிருத்திக்காக நாங்கள் பாடுபட்டக் கொண்டிருக்கின்றோம். இந்தப் பட்டிப்பளைப் பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 07 மைதானங்களின் புனரமைப்பிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசடித்தீவு பிரதேசம் சார்ந்த அபிவிருத்தி செயற்பாட்டுக்கா சுமார் 55 லெட்சம் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எமது இளைஞர்கள் மத்தியில் கருத்து ரீதியான பல்வேறுபட்ட முரண்பாடுகள் இருந்தாலும், எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற விடயத்தில் ஒரே சிந்தனை இருக்கின்றது. நாங்கள் நல்ல விடயத்திற்காக ஒன்றாகத் திரண்டு வேலை செய்ய வேண்டும். தேர்தல் காலங்களில் நாங்கள் செய்கின்ற நல்லவைகள் எம்முடன் இருக்கும். அப்போது எம்மால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களை மக்கள் உணர்வார்கள்.
தேவையற்ற விடயங்களைக் கதைப்பதாக இருந்தால் நிறைய விடயங்கள் கதைக்க முடியும். அவை சில வேளைகளில் அநாகரீகமான பேச்சுக்களாகவும் அமைந்துவிடும். பட்டிருப்புக்கு வருகின்ற அபிவிருத்திகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடை செய்கின்றார்கள் என மிக வடிகட்டிய பொய்யொன்று அண்மைக் காலங்களில் பரப்பப்பட்டது. பொய்களைச் சொல்லி பொய்வியாபார அரசியல் செய்ய வேண்டிய எண்ணம் எங்களுக்கு இல்லை. உண்மைகளைப் பேசுவோம், முடிந்ததைச் செய்வோம் என்பதே எங்களது நோக்கம்.
பட்டிருப்புக்கு வருகின்ற அபிவிருத்திகளைத் தடை செய்வதற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை. என்னைப் பொருத்த வரையில் எமது பிரதேசம் எவ்வாறாயினும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். நம்மவர்கள் சிலர் எமது மக்களை ஏமாற்றி, பொய் கூறி எமது மக்களின் வாக்குகளைப் பெற்று வேறு யாரோ ஒருவரை அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினர்களாக உருவாக்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு விடயத்தில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். நாங்கள் ஒரு போதும் காத்தான்குடிக்கோ, ஏறாவூருக்கு, ஓட்டமாவடிக்கோ சென்று வாக்குப்பிச்சை கேட்பதில்லை. அவ்வாறு கேட்டாலும் ஒரு முஸ்லீம் குடிமகன் எங்களுக்காக ஒரு வாக்குக் கூடச் செலுத்தமாட்டான். ஆனால் எம்மிடம் இருக்கின்ற பொறுப்பற்ற சிந்தனையின் காரணமாக, தூரநோக்கின்றி எம்மவர்கள் சிலர் எங்களுடைய வாக்குகளை எடுத்து வேறு யாருக்கோ முடிசூட்டுகின்றனர். அந்த முடிசூட்டலின் மூலம் வந்த அமைச்சர்களின் ஊடாக எமது பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றனவா என்று பாக்கின்றபோது இல்லை என்றே சொல்ல வேண்டும். அவர்கள் அவர்களின் பிரதேசங்களின் அபிவிருத்திகளை மாத்திரம் செய்கின்றார்களே தவிர அவர்கள் எல்லாப் பிரதேசங்களுக்குமான அமைச்சர்களாக நடந்து கொள்வதில்லை.
சில வேளைகளில் நாங்கள் பெரும்பான்மையின அமைச்சர்களை நாடி ஒரு உதவிகளைப் பெறுகின்ற போது அவற்றை அவர்கள் பக்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் செய்து தருவதாக இல்லை என்பதே உண்மையான விடயம். தேர்தல் காலங்களில் ஆறுதல் பரிசில்கள் தருவது போன்று சைக்கிள், தையல் இயந்திரம் கொடுத்து விட்டு எமது மக்களின் வாக்குகளை வசூலித்துச் செல்வார்கள். எங்களுடைய வாக்குகளை கபளீகரம் செய்து யாரோ ஒருவர் அமைச்சராக வருவதற்கு நாங்கள் இடம்கொடுக்கத் தயாராக இல்லை.
சிலர் கருதுகின்றார்கள் ஆளுங்கட்சியில் இருந்தால் தான் அபிவிருத்தி செய்யலாம் என்று ஆனால் அவ்வாறு இல்லை. எமது கம்பெரலிய நிதியின் மூலம் வெருகல் தொடக்கம் துறைநீலாவணை வரையில் சகல பகுதிகளுக்கு பாகுபாடின்றி வழங்கியுள்ளோம். சில குறைபாடுகள் இருந்தாலும் எம்மால் முடிந்தவரையில் எங்கெல்லாம் எமது மக்கள் இருக்கின்றார்களோ அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்காக நாங்கள் நிதி ஒதுக்கீடுகள் செய்து கொடுத்திருக்கின்றோம்.
நாம் ஒன்றாக இருந்தால் தான் எமக்கான அபிவிருத்திகளை நாமே செய்ய முடியும். எமக்குள் ஒற்றுமை இல்லாவிடின் அனைவருக்குமே தாழ்வான நிலையாகிவிடும். பிழையான வியாக்கியானங்கள், தவறான கருத்துக்களை மக்களுக்குச் சொல்லும் சின்னத்தனமான எண்ணம் எங்களுக்கு இல்லை. எனவே எந்தக் கருத்துக்களை யார் சொன்னாலும் அந்தக் கருத்துக்களில் உண்மை, பொய் இருக்கின்றனவா என்பதை ஆளமாகச் சிந்தமித்து முடிவெடுப்பதற்கு இறைவன் மூளையினைத் தந்திருக்கின்றார். எனவே அதனைப் பயன்படுத்தி உண்மைகளைத் தெளிய வேண்டும் என்று தெரிவித்தார்.