மட்டக்களப்பில் போதைப் பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் நிறைவு
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் போதைப் பொருள் அற்ற சமுகம் சௌபாக்கிய தேசம் எனும் தொனிப் பொருளில் அரச உத்தியோகத்தர்களை பயிற்றுவிக்கும் தேசிய வேலைத்திட்டம் நாடுபூராகவும் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமைபுரியும் சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய உத்தியோகத்தர்களையும் இணைத்து போதைப் பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்பான மூன்று நாள் பயிற்சிகள் வழங்கி வைக்கப்பட்டன. இப்பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் பயிற்சியின் இறுதித் தினமாகிய இன்று (19) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கபட்டது.
இதன்போது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்து வெளியிடுகையில் போதைப் பொருள் பாவனையிலிருந்து சமுகத்தை மீட்டெடுப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும். போதைப் பொருள் பாவனையில் இருந்து சமுகத்தைப் பாதுகாப்பது எவ்வாறு என திட்டமிடவேண்டும். போதைப் பொருள் பாவனை மற்றும் பரிமாற்றங்கள் தொடர்பாக வெளிவராமலிருக்கும் தகவல்களை கண்டுபிடிக்க வேண்டும். அதனைக் கட்டுப்படுத்த குழுக்களாக இணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் இப்பயிற்சி நெறியில் இவ்வுத்தியோகத்தர்களுக்கு போதைப் பொருள் பாவனையினைத் தடுத்தல், சிகிச்சையளித்தல் மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான திறன்சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின்போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவீஸ்வரன், தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் புனர்வாழ்வு சிகிச்சை நிலைய உதவிக் கல்வி உத்தியோகத்தர் பீ.எம். றசீட், உதவி வெளிக்கள உத்தியோகத்தர் ஏ. எட்வின் ரொஜர், உதவி உளவள ஆலோசகர் ஜீ. விஜயதர்சன் மற்றும் பயிற்சியினைப் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர்கள் பிரசன்னமாயிருந்தனர்.