எமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தொடர்பில் தெளிவூட்டும் கூட்டம் திங்கட்கிழமை(12) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்இமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபைஇமுன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம்,முன்னால் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள்,பிரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்..
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 36 ஆயுத குழுக்கள் இருந்த போது இருந்த ஒற்றுமையை விட கூடுதலாக இருக்கிறது.
விடுதலைப்புலிகளின் போராட தடை விதித்த 30 சர்வதேச நாடுகள்தான் இன்று எமக்கு ஆதரவு போல் நடிக்கிறார்கள். எமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியுள்ளோம் என்பது நிதர்சனமான உண்மை.
முறையான அதிகார பகிர்வுக்கு நாங்கள் ஆதரவு தருவோம் என முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எமக்கு வழங்கிய வாக்குறுதியின் பின்னர் மகிந்த தரப்பிற்கு இந்தியா கொடுத்த அழுத்ததின் காரணமாகத்தான் 18 சுற்று பேச்சுக்கள் இடம்பெற்றது.
நாட்டின் அனைத்து விடயங்களிலும் தான்தோன்றி தனமாக செயற்பட்டு 18வது அரசியலமைப்பை இயற்றி செய்யப்பட்டதன் விளைவாகத்தான் சிங்கள மக்களும் கிளர்ந்தனர். இதன்மூலமாக சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்களையும் கூட்டித்தான் நல்லாட்சியை கொண்டுவந்தோம். இதில் மிகப்பெரிய பங்கு எமக்குரியது.
ஜனாதிபதிக்கு அரசியல் அதிகாரங்கள் இல்லை. அரசியல் போக்கிரித்தனம் அதிகரித்துவிட்டது. அரசுகள் தடம்புரளும்போது தூக்கி நிறுத்தியவர்கள் நாங்கள்.
ஒக்டோபர் புரட்சியை நாங்கள் வென்றிருக்காவிட்டால் மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்திருப்பார். ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்ற நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை. பிரதமர் ரணிலுக்கும் நீதிமன்றம் செல்லும் திராணி இருக்கவில்லை. அதனால்தான் ஹபீர் காசிம்இ அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் முறைப்பாட்டாரள்களாக வந்தார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.