மக்கள் திலகம் எம். ஜி. ஆரை போன்றவர் திலக் ராஜபக்ஸ, அவரின் பெயர் இன்று எட்டு திசைகளிலும் ஒலித்து கொண்டிருக்கின்றது என்று அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தெரிவித்தார்.
வியத்மகே அமைப்பு சார்பாக மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்ற அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக் ஸவை ஆத்ரித்து ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி, சவளக்கடை, மத்தியமுகாம் போன்ற பிரதேசங்களில் நேற்று சனிக்கிழமை மேற்கொண்ட சூறாவளி பிரசாரத்தின்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இதன்போது மேலும் தெரிவித்தவை வருமாறு
தேர்தல் காலங்களில் நம்பியார்கள் பலரும் வாக்குகளை கேட்டு உங்கள் முன்னிலைக்கு வருவது வழக்கம். அவர்கள் பின்னர் காணாமல் போய் விடுவார்கள். இன்னும் ஒரு ஐந்து வருடங்களுக்கு பின்புதான் மீண்டும் வருவார்கள். நடிகர் திலகங்களும் வாக்குகளை கேட்டு உங்களிடம் வருவார்கள். உணர்ச்சிகள் கொப்பளிக்க வாயளவில் பேசி உங்களை சூடேற்றி விடுவார்கள். இனவாதம், மதவாதம், பிரிவினைவாதம், பிரதேசவாதம் ஆகியவற்றை பேசி உங்கள் வாக்குகளை கபளீகரம் செய்து விடுவார்கள்.
அம்பாறை மாவட்டம் குட்டி சிங்கப்பூராக மாற வேண்டும். அம்பாறை மாவட்ட மக்கள் அந்த பூலோக சொர்க்கத்தில் வாழ வேண்டும். எமது மாவட்ட மக்கள் அனைவருக்கும் அபிவிருத்தி, பொருளாதார மலர்ச்சி, வாழ்வாதார எழுச்சி ஆகியன கிடைக்க வேண்டும் என்பதுடன் உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை தேவைகள் அடங்கலாக உயிர் வாழும் உரிமைக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்து கொடுக்கப்பட வேண்டும்.
கனவு காணுங்கள் என்று இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் கூறி இருக்கின்றார். எமது கனவுகளை நனவுகளாக்கி தர வல்ல நாயகனாக டாக்டர் திலக் ராஜபக்ஸ விளங்குகின்றார். தமிழ், முஸ்லிம் மக்களை அரவணைத்து நடக்கின்ற பாரம்பரியத்தில் பிறந்தவர். அன்பால் மக்களின் மனங்களை வெல்ல முடியும் என்று விசுவாசிப்பவர். கொடுப்பவர்களுக்கு குறை இல்லை என்று நம்புபவர். சொல்வதை செய்பவர். செய்வதை சொல்பவர்.
இவருக்கு என்று அபிமானிகள் கூட்டம் அம்பாறை மாவட்டம் முழுவதிலும் நிறைந்து காணப்படுகின்றது. அவர்கள் அனைவரும் இவரிடம் இருந்து நன்மைகளை பெற்ற பயனாளிகள் ஆவர். ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ இவரை மிக சரியாக அடையாளம் கண்டவராக வியத்மகே அமைப்பு சார்பாக வேட்பாளராக இறக்கி உள்ளார். ஜனாதிபதியின் நேரடியான பிரதிநிதியாக இத்தேர்தலில் இவர் போட்டியிடுகின்றமை இவருக்கு மாத்திரம் அல்ல எமது மாவட்ட மக்களுக்கு கிடைத்து உள்ள முதலாவது வெற்றி ஆகும். இவரின் தேர்தல் வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்களும் பங்காளிகளாக இணைதல் வேண்டும். தமிழ் பேசும் மக்களின் 20,000 வாக்குகளை ஒன்றியம் திலக் ராஜபக்ஸவுக்கு பெற்று கொடுக்கும்.