மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னாமுனை மற்றும் பாவற்கொடிச்சேனை கிராம சேவையாளர் பிரிவுளில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்குடன் வீட்டுத்தோட்ட செயற்பாடுகள் வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொரோனா வைரசின் பரவலை தடுக்கும் முகமாக அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஊர்முடங்கலை அடுத்து இவ்வமைப்பினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் உள்ள சுமார் 7000 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை கனடிய புலம்பெயர் உறவுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புகளின் நிதிப்பங்களிப்புடன் வழங்கியிருந்தது. இதன் தொடர் நடவடிக்கையாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீட்டுத்தோட்டங்களை உருவாக்கி வரும் செயற்றிட்டத்தினை இவ்வமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
கனடியன் தமிழ் மனிதநேய அமைப்பின் நிதி அனுசாரணையில் மேற்கொள்ளப்படும் இவ்வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கதிரவெளி கிராமசேவையாளர் பிரிவை சேர்ந்த சுமார் 100 பயனாளிகளுக்கு மரக்கறி நாற்றுக்கள், விதைகள், மரவள்ளி தடிகள் மற்றும் நீர் இறைக்கும் பூவாளி போன்ற உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாயன்று (15) கதிரவெளி கலைமகள் முன்பள்ளி கட்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோறளைபற்று வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆறுமுகம் சுதாகரன், சிவம் அறக்கட்டளை அமைப்பின் இணைப்பாளரும் கிராம அபிவிருத்தி சங்க தலைவருமாகிய திருமதி திலகம் கரிதாஸ், நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் கந்தையா சுதன், வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவகத்தின் கள அலுவலர் பொன்னுத்துரை விநோதன் மற்றும் சமுக சேவையாளர்கள், பொதுமக்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.