நாட்டினுடைய மேன்மைதங்கிய ஜனாதிபதியின் நாட்டை சுபீட்சத்தின்பால் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக “அனைவருக்கும் கல்வி” என்னும் தொனிப்பொருளிற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பில் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோக பூர்வ ஆவணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (15) திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட ஒன்பது பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வானது மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றபோது குறித்த நிகழ்விற்கு பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ ஆவணங்களை தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளான மட்/பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயம், மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயம், மட்/காக்காச்சிவெட்டை விஸ்ணு வித்தியாலயம், மட்/நாவற்காடு நாமகள் வித்தியாலயம், மட்/கரடியனாறு மகாவித்தியாலயம், மட்/செங்கலடி மத்திய கல்லூரி, மட்/வந்தாறுமுலை விஸ்ணு வித்தியாலயம், மட்/சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயம், மட்/புதுக்குடயிருப்பு கண்ணகி வித்தியாலயம் உள்ளிட்ட
பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் பாடசாலைகளின் நிருவாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.
மாவட்டத்தில் நீண்டகாலமாக தரமுயர்த்தப்படாமல் இருந்து வந்த பாடசாலைகள் தற்போதுள்ள அரசினால் தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், மேலும் தகுதிவாய்ந்த பல பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களை தான் முன்னெடுத்துவருவதாகவும், தரமுயர்த்தப்பட்டுள்ள தேசியப் பாடசாலைகளுக்கு தேவையான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை வழங்கும்பட்சத்தில் அவற்றை மிக விரைவாக நிவர்த்தி செய்து தருவதுடன், இவ்வாறான தரமுயர்த்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய கல்வி அமைச்சர் உள்ளிட்ட நாட்டின் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் இதன்போது நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக
செயலாளர்கள், அதிபர்கள், உப அதிபர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.