மட்டக்களப்பில் 3,98,301 பேர் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் தகுதி.

(-க.விஜயரெத்தினம்)
எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இலட்சத்து தொண்ணூற்றெட்டு ஆயிரத்து முந்நூற்று ஒரு(398,301)பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உதவித்தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் …எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலையொட்டி தேர்தல்கள் பணிக்குழு வேலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்ற இவ்வேளையில் 2018ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் உள்ள பெயர்பட்டியலின் பிரகாரமே வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தேர்தல் தொகுதியில் 1,15,974 பேரும்,மட்டக்களப்பு தொகுதியில்(இரட்டைத்தொகுதி) 1,87,682 பேரும்,பட்டிருப்புத் தொகுதியில் 94,645பேருமாக 3,98,301 பேர் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளார்கள்.

2019ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு வேலைகள் இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான கடமைக்கான விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கடமைக்கான விண்ணப்பம் கோரப்பட்டும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப முடியாதவர்கள் இம்மாதம் 30திகதிக்கு முன்னர் மட்டக்களப்பு உதவித்தேர்தல் ஆணையாளர் அலுவலத்திற்கு ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts