(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியில் கடத்திச்செல்லப்பட்ட பெருமளவான கேரளக் கஞ்சா இன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை(21) காலை மட்டக்களப்பு ஊரணி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் இவற்றினை கைப்பற்றியுள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றினை சோதனையிட்டபோது குடும்பத்துடன் செல்வதுபோன்றும் பரிசுகள் கொண்டுசெல்வது போன்றும் பொதி செய்யப்பட்ட நிலையில் ஐந்து(5)பாரிசல்களில் கேரள கஞ்சா பொதிசெய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.ஐ.ராஜபக்ஸ தலைமையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஓட்டமாவடியில் இருந்து பாலமுனைக்கு சென்ற நிலையிலேயே குறித்த முச்சக்கர வண்டி சோதனையிடப்பட்டதாகவும் குறித்த முச்சக்கர வண்டியில் சுமார் 10கிலோ கேளர கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.