மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயங்குடா, வந்தாறுமூலை மற்றும் கரடியனாறு கமநல சேவை நிலையங்களினால் மேற்பார்வை செய்யப்படும் விவசாய நிலங்களில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கான பெரும்போக பயிர் செய்கை ஆரம்பிப்தற்கான ஆரம்பக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் (18) ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
.
இதன்போது இப்பிரதேசத்தில் 29 ஆயிரத்தி 10 ஏக்கர் விவசாய நிலங்களில் பெரும்போக பயிற்செய்கை பண்ணப்படுவதற்கான முன்ஆயத்தங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மானிய உர விநியோகம் தொட்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இவ்விவசாய நிலங்களில் சிறு நீர்ப்பாசன குளங்கள் மூலமாக நீரைப் பெற்றுக் கொள்ளும் 3128 ஏக்கர் நிலத்திலும், மானாவாரி 25 ஆயிரத்தி 882 ஏக்கர் நிலத்திலும் நெற்செய்கை மற்றும் மறுபயிர்; செய்கை பண்ணப்படவுள்ளது.
இப்பயிர் செய்கை நிலங்களுக்குத் தேவையான உரங்களை உரிய காலத்திற்கு பெற்றுக் கோடுக்க முடியமென அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா இதன்போது கருத்துத் தெரிவித்தார். மேலும் அவர் கருத்து வெளியிடுகையில் நெல்லை மாத்திரமன்றி மறுவயற் பயிர்களையும் செய்கை பன்னவேண்டும். இதனூடாகத்தான் இம்மாவட்டம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறமுடியும் என விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதுதவிர இம்முறை நெற்செய்கை பண்ணவுள்ள விவசாயிகளிடம் தரப்படுத்தப்பட்ட விதை நெற்களை செய்கை பண்ணுமாறும், மறுபயிர் செய்கை பன்னுவதற்கு ஆர்வமூட்டப்பட்டதுடன், விவசாயிகளினது சந்தேகங்களுக்கான விளக்கங்களும் சம்மந்தப்படப்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
மேலும் இப்பிரதேச விவசாயிகளின் விவசாய நிலங்களுக்குள் பண்ணையாளர்களது மாடுகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதெனவும், வெள்ளம் மற்றும் காட்டு யானைகளினாலும் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகளால் விசனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி உடனுக்குடன் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் என். வில்வரட்ணத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என். நாகராத்தினம், மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீன், நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ். நிரோஜன், விவசாய காப்புறுதி சபை உதவிப் பணிப்பாளர் எம்.பாஸ்கரன், கரடியணாறு விவசாய பயிற்சி நிலைய விவசாய பிரதிப்பணிப்பாளர் ஆர். சிவனேசன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. கருணாகரன், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபன் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல சேவைகள் திணைக்கள பெரும்பாக உத்தியோகத்தர்கள், விவசாய மற்றும் கால்நடை அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.