மட்டக்களப்பில் தொடரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நகரில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு (25) பெரிய உப்போடை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு சுகாதாரப் பூச்சியியல் நிபுணர்களின் அறிக்கையின்படி கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பிரிவிற்குட்பட்ட பெரிய உப்போடை பிரதேசத்தில் டெங்கு தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என இனங்காணப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகர சபைக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அரிகாரி வைத்தியக் கலாநிதி கே. கிரிசுதன் விடுத்த வேண்டுகோளிற்கு அமைய சிரமதானப் பணி நடைபெற்றதாக மாநகர ஆணையாளர் என். மணிவண்ணன் தெரிவித்தார்.
சுகாதார வைத்திய அரிகாரயின் அறிக்ககையின்படி மட்டக்களப்பு மாநகர சபையில் தாமரைக்கேணி, இருதயபுரம் மேற்கு, புன்னைச்சோலை, கல்லடி, நாவற்குடா ஆகிய பொதுச் சுகாதாரப் பிரிவுகளில் டெங்கு தொற்று இனங்காணப்பட்ட நிலையில் குறித்த பிரதேசங்களுக்கு புகை விசிறல் மேற்கொள்ளப்பட்டது. 20 ஆவது கிழமை முடிவினில் இதுவரை 54 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பெரிய உப்போடை பிரதேசத்தில் டெங்கு பரவும் மூலங்கள் அடையாளங் காணப்பட்டதோடு குறித்த பிரதேசத்தில் உள்ள வீடுகள், வெற்றுக் காணிகள் பரீட்சிக்கப்பட்டு டெங்கு நுளம்புக் குடம்பிகள் உள்ள காண உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் தி.சரவணபவன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், மாநகர உறுப்பினாகள், மாநகரசபையின் ஊழியர்கள் மற்றும் மாநகர சுகாதாரத் தொழிலாளர்கள் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.