மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிக டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிப்பு.

 
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த மார்ச் 26 ஆந் திகதி தொடக்கம் ஏப்ரல் 02 ஆந் திகதி வரையும் 46 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
 
இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளானவர்களில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 நோயாளர்களும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 நோயாளர்களும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 நோயாளர்களும், மண்முனை வடக்கு மட்டக்களப்பு, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 03 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை வாழைச்சேனை, ஏறாவூர் நகர், வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 02 நோயாளர்களும், காத்தான்குடி, கிரான், மண்முனைப்பற்று ஆரையம்பதி  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 01 நோயாளர்களுமாக மொத்தம் 46 பேர் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
 
எனினும் கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுவில் எந்தவொரு டெங்கு நோயாளர்களும்; இனங்காணப்படவில்லை.
 
இவ் வருடம் டெங்கு நோயினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 03 எனவும் டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை  2391 எனவும் சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதேவேளை பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிகிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

Related posts