மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 37 பேர் மரணம் அடைந்துள்ளதுடன், மூன்றாவது அலையில் 2,200 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 963 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கலென மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (07) ஆந் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
அவர் இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இதுவரை பயணத்தடை விதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த வறிய குடும்பங்களுக்கான கொடுப்பனவாக 82,832 குடும்பங்களுக்கு 41 கோடியே 41 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பிரதேச செயலக ரீதியாக வழங்கப்பட்டு வருகின்றது. அதேவேளை குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாத நபர்களுக்கும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக எமது மாவட்டத்திற்கும் தடுப்புபூசி இன்று அல்லது நாளை மாவட்டத்தை வந்தடைந்தடையும் இதன் அடிப்படையில் எமது மாவட்டத்திற்கு
25,000 தடுப்பூசிகள் வர இருக்கின்றன. இந்த தடுப்பூசிகளை ஆறு பிரிவுகளாக வழங்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்ட திற்கு அமைய நடவடிக்கைகளை எமது பிராந்திய சுகாதார பணிப்பாளர் முன்னெடுத்துவருகின்றார்.
இதனை ஆறு பிரிவுகளாக பிரித்து ஏற்றுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எமது மாவட்டத்தில் முதியோர் இல்லங்களில் 144 முதியோர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்படும், கொவிட் தொற்று அதிகமாக இனங்கானப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள கர்ப்பிணி தாய்மார்கள், அதைவிட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும்
இத் தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்தோடு பொதுமக்களுடன் நெருங்கி நேரடியாக கடமையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களையும் இனங்காணுமாறு பணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. அதற்கு அமைவாக எமது மாவட்டத்தில் தடுப்பூசிகள் மிக விரைவில் ஏற்பட இருக்கின்றன.
கடந்த 18.5.2021 ஆம் திகதி மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்திருந்தோம்.
அதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதனடிப்படையில் ஏற்கனவே அதில் 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டு இருக்கின்றன.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் ஒரு பிரதேசமும் அதே நேரம் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.