மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 256 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் மூன்றாவது அலையில் மாத்திரம் 9626 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 189 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
 
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.அச்சுதன்
 இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தாக்கத்தினால் இதுவரையில் 137 பேர் மரணமடைந்துள்ளதுடன், மூன்றாவது அலையில் மாத்திரம் 128 பேர் மரணமடைந்துள்ளனர்.
 
கடந்த 24 மணித்தியாலங்களில் எந்தவிதமான மரணங்களும் பதிவாகாத போதிலும் இதற்கு முன்னர் 3 மரணங்களும், அதற்கு முதல் நாள் 6 மரணங்களும் பதிவாகியுள்ளன.
 
மொத்தமாக இதுவரைக்கும் 32187 பீசிஆர் பரிசோதனைகளும், 44656 அன்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 2 இலட்சத்தி 75 ஆயிரம் தடுப்பூசிகள் முதலாம் கட்டமாக வழங்கப்பட்டிருக்கின்றது, இதற்கு மேலதிகமாக இரண்டாம் கட்ட தடுப்பூசிகளாக 75 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முடிவுறுகின்றன கட்டமாக அமைகின்றது.
 
ஆரம்பத்தில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்பவர்களது எண்ணிக்கை அதிகமாக காணப்பட்ட போதிலும் தற்போது குறைவாக கணப்படுகின்றது.
இதற்கு காரணம் மக்கள் முன்வராமையே, மக்களை தேடி தடுப்பூசிகளை ஏற்றுமளவிற்கு எம்மை தள்ளாமல், மக்களாகவே முன்வந்து தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும்..
அரசினால் மிகவும் செலவு செய்யப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்படுகின்ற மிகவும் பாதுகாப்பான செயற்பாடு இதுவாகும்.
 
மக்கள் இதனைக் கருத்திற்கொண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள கூடிய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள வயதெல்லைகளை உடையவர்கள் தாமாகவே முன்வந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
 
இதே வேளை அனைவரும் சமூகப் பொறுப்புடன் நோய் பரவாத வண்ணம்  தமது சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே இவ்வாறான தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
 
அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய வேலைத்தளங்கள் ஆகியவற்றில் கொவிட் தொற்கு அதிகரித்து வருவதை காண முடிகின்றது. இதற்குக் காரணம் பொறுப்பற்ற செயல் எனக் கூறமுடியாது, கவனமற்ற நிலை என்றே சொல்லலாம். அவ்வாறாக தொற்றுக்கள் ஏற்படும்போது சில சந்தர்ப்பங்களில் முற்றுமுழுதாக உரிய கிளைய அல்லது அந்த நிறுவனத்தை 14 நாட்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்படலாம். தொற்றினை மேலும் பரவாமல் தடுப்பதற்காக இதனை கருத்திற்கொண்டு  காரியாலயங்கள்  மற்றும் வேலைத்தலங்களில் ஏற்படுகின்ற தொற்றும் பரவலை தடுப்பதற்கு முன்வரவேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

Related posts