மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு- வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயித்தியமலை, மற்றும் மண்டபத்தடி கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட விவசாய நிலங்களில் சிறுபோக பயிற்செய்கை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிஸ்காந் தலைமையில் புதன்கிழமை (29) மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது இப்பிரதேசத்தில் மானாவரி செய்கை ஆற்றுப்பாச்சல், உன்னிச்சை திட்டம் போன்ற நீர்பாசனத் திட்டங்கள் மூலமாக மேற்கொள்ளவிருக்கும்
சிறுபோக நெல் மற்றும் தானிய பயிர் செய்கை பண்ணப்படுவதற்கான முன் ஆயத்தங்கள், நீர்ப்பாசனம் மற்றும் பசளை விநியோகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது பல விடயங்கள் கூட்டத் தீர்மானமாகவும் எடுக்கப்பட்டது
இதில், விதைப்பு ஆரம்பம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 திகதி தொடக்கம் 20ம் திகதி வரை எனவும் தீர்மானிக்கப்பட்டது
மேலும் இம்முறை சேதனப் பசளையினை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்
நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாயத்திணைக்கள துறைசார் தலைவர்கள், வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி, கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள்,
விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.