மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் துறைநீலாவணைக் கிராமத்திற்கு நேரடியாக வருகைதந்து அப்;பிரதேச பொது அமைப்புக்களுடன் கிராமத்தின் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை இன்று 25 ஆம் திகதி சனிக்கிழமை துறைநீலாவணை தெற்கு 1 பல்தேவைக்கட்டிட மண்டபத்தில் ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் சா.இராஜேந்திரம் தலைமையில் இடம்பெற்றது.
விவசாயிகளின் நலன்கருதி துறைநீலாவணையில் அமைக்கப்பட்டிருக்கின்ற ஏற்று நீர்ப்பாசணம் பழுதடைந்துள்ளமையால் அதனைத் திருத்தம் செய்தல் மற்றும் உவர் நீர் அணைக்கட்டு அமைப்பது தொடர்பாக விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் அரச அதிபர் மா.உதயகுமார் அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்ததன் பயனாக மாவட்டசெயலாளர் துறைநீலாவணைக்கிராமத்திற்கு நேரடியாக வருகைதந்து விவசாய அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பார்வையிட்டார். அதன் பின்னர் பொதுமக்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இதன்போது கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் கிராமத்தின் தேவைகள் முன்வைக்கப்பட்டபோது இத்தேவைகளில் முக்கியமான தேவைகளை நிவர்த்திசெய்து தருவதாக மாவட்டசெயலாளர் உறுதியளித்துள்ளார்.
இந்நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர் கே.சரவணமுத்து கிராமசேவகர்களான பி.புனிதன்,கே.சுரேஸ் உட்பட கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.