தற்போது வெளியாகியுள்ள 2018 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய பாடசாலையில் பல மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளார்கள் எனும் தகவல் கிடைத்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமூடாக கிடைக்கப்பெற்றுள்ள பெறுபேறுகளின்படி
9 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தியைப் பெற்றுள்ள அதேவேளை
7 மாணவர்கள் 8A B சித்தியினைப் பெற்றுள்ளார்கள். இவை தவிர பல மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் நற்பெயரை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு தற்போதைய அதிபர் ரி . யசோதரன், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்பணிப்புள்ள சேவை முக்கிய காரணிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிபர் தான் பதவியேற்ற காலப்பகுதியிலிருந்து மேற்கொண்டுவரும் சிறந்த முன்னெடுப்புக்களிற்குக் கிடைத்த பயனாகவே இதனைப் பார்க்கலாம். இளம் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புள்ள சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம் எனவும் இதனைச் சொல்லலாம்.
அனைத்திற்கும் மேலாக, பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயற்திறனான நடவடிக்கைகள் குறிப்பாக கடந்த வருடம் சங்கத்தின் தலைவராகவிருந்து பாடசாலையின் கல்வி மேம்படுத்தல் திட்டங்களுக்கு அளப்பரிய பணியாற்றிய திரு.மு.முருகவேள் மற்றும் அவருடன் இணைந்து அர்பணிப்புடன் செயற்பட்ட தற்போதய தலைவர் எந்திரி மங்களேஸ்வரன் மற்றும் துடிப்புள்ள அங்கத்தவர்களின் சேவைத்திறன் பாராட்டப்படவேண்டியதே என பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றனர் .