(துதி)
சர்வதேச இளைஞர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எல்லே சுற்றுப்போட்டியில் ஏறாவூர்ப்பற்று பிரதேச களுவன்கேணி இளங்கோ இளைஞர் கழகம் வெற்றியீட்டி மண்முனை மேற்கு எல்லே சவால் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது
மண்முனை மேற்கு, ஏறாவூர்ப் பற்று, மண்முனை வடக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பல அணிகள் கலந்துகொண்ட இச்சுற்றுத்தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் குறிஞ்சாமுனை சக்தி இளைஞர் கழகத்தை வீழ்த்தி சவுக்கடி ஆதவன் இளைஞர்கழக அணியும், ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர்கழக அணியை வீழ்த்தி களுவன்கேணி இளங்கோ இளைஞர்கழக அணியும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன.
இன்றைய தினம் (25) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட்டத்தினைத் தெரிவு செய்த சவுக்கடி ஆதவன் அணி 30 பந்துகளுக்கு 06 ஓட்டங்களை பெற்று இளங்கோ அணிக்கு 07 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. பதிலுக்குத் துடுப்படுத்தாடிய களுவான்கேணி இளங்கோ இளைஞர் அணி எட்டு பந்து மீதமிருக்க எட்டு வீரர்களை மாத்திரம் இழந்து மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தினால் வெற்றி இலக்கை அடைந்தது.
சுற்றுப்போட்டியின் இறுதியாக இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் ரி.சண்முகராசா அவர்களும் அதிதிகளாக அபிவிருத்தி உத்தியோகஸ்தரும், ஈச்சந்தீவு உதயசூரியன் விளையாட்டுக் கழகத் தலைவருமான என்.சுதன், மண்முனை மேற்குப் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் க.சசீந்திரன் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அ.தர்ஷிக்கா ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கான பதக்கங்கள், கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
இதன் போது சிறந்த களத்தடுப்பாளருக்கான வெற்றிக் கிண்ணத்தை செல்வன் கி. கிசாளனும், சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான வெற்றிக் கிண்ணத்தினை செல்வன் எஸ்.விதுசனும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.