போராட்டம் நடாத்திவரும் பொத்துவில் கனகர் கிராமமக்களின் காணிகள் எல்லையிடப்பட்டு மண்பரிசோதனைக்கான மாதிரி கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டது. கொரோனா காரணமாக அதன் அறிக்கை தாமதமாகியுள்ளது. அறிக்கை கிடைக்கப்பெற்றதும் மக்களுக்கான காணிப்பிரிப்பு இடம்பெறும்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தன்னைத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு வினவிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் பிரபல சமுகசெயற்பாட்டாளருமாகிய செல்வராஜா கணேசானந்தத்திடம் தெரிவித்தார்.
பொத்துவில் ஊறணி 40ஆம் கட்டை கனகர் கிராமமக்களின் காணிவிடுவிப்பு தொடர் போராட்டம் நேற்றுடன் 650நாட்களை பூர்த்திசெய்கிறது.
அதனைப் பார்வையிட வேட்பாளர் எஸ்.கணேசானந்தம் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் த.அ.கட்சியின் வாலிபரணி துணைச்செயலாளர் இளம்சட்டத்தரணி அருள்.நிதான்சன் உள்ளிட்ட குழுவினர் நேற்று அங்கு விஜயம்செய்தனர்.
பொத்துவில் கனகர்கிராம மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பாக போராட்டக்களத்தில் நின்று வேட்பாளர் கணேஸ் தொலைபேசி மூலம் அரசாங்கஅதிபரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
கொரோனவுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக போராட்டம் நடாத்திவரும் மக்களைச் சந்தித்து சமகாலநிலைமையை கேட்டறிந்தனர்.
போராட்டக்குழுத்தலைவி பி.றங்கத்தனா கூறுகையில்: கடந்த 650நாட்களாக பலஇன்னல்கள் வேதனைகளுக்கு மத்தியில் இப்போராட்டத்தை இறுதிபலன்கிடைக்கும்வரை முன்னெடுத்து வருகிறோம்.
தற்போது தேர்தல் காலமாகையால் பலரும் இங்குவந்து செல்கின்றனர். எனினும் ஆரம்பத்திலிருந்து தவிசாளர் ஜெயசிறில் சமுகசேவையாளர் கணேஸ் பதில்தவிசாளர் பார்த்தீபன் உள்ளிட்டோர் எமது போரட்டத்திற்கு இன்றுவரை வலுச்சேர்த்துவருகின்றனர். உங்களுக்கும் எமது போராட்டத்தை அவ்வப்போது உலகறியச்செய்த ஊடகவியலாளர் சகாதேவராஜா அவர்களுக்கும் ஊடகங்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்.
எமது காணிகளுக்கு எல்லையிடும் பணி இறுதியாக நடைபெற்றது. பிரதேசசெயலாளர் திரவியராஜ் சேரும் வந்து அக்கறைஎடுக்கிறார்.இனி என்னநடக்குமோ தெரியாது.நீங்கள்தான் கேட்டுச்சொல்லலவேண்டும் என்றார்.