மதம் மாறுவது தாயை மாற்றுவதற்கு ஒப்பான ஈன செயல் என்கிற உண்மையை இந்துக்கள் உள்ளபடி புரிந்து நடக்க வேண்டும் என்று சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார்.
கல்முனை சந்தான ஈஸ்வரர் கோவில் பஞ்ச தல இராஜ கோபுர அடிக்கல் நாட்டுவிழா கடந்த திங்கட்கிழமை பகல் இடம்பெற்றது. வடமாராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய சந்நிதியான் ஆச்சிரமத்தை சேர்ந்த கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் போன்ற பேராளர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் அடிக்கல் நாட்டி வைத்த பிற்பாடு விசேட உரை ஆற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-
சிவபூமி என்று யாழ்ப்பாணத்தை மாத்திரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருமூலர் சொல்லி இருக்கவில்லை. இலங்கை முழுவதையுமே அவர் சொல்லி இருந்தார். இந்நாடு முழுவதிலுமே சிவநெறி அருளாட்சி செய்து இருக்கின்றது. இது குறித்து இந்துக்களாகிய நாம் பெருமை உடையவர்களாக இருக்க வேண்டும்.
அம்பாறை மாவட்டமும் சிவபூமியாகவே விளங்கி உள்ளது. இது குறித்து அம்பாறை மாவட்ட இந்துக்களும் பெருமிதம் உடையவர்களாக இருக்க வேண்டும். மதம் மாறுவது தாயை மாற்றுவதற்கு ஒப்பான ஈன செயல் ஆகும். பிறப்புரிமையான மதத்தை எதற்காகவும், எச்சூழலிலும், எவருக்கும் விட்டு கொடுக்க முடியாது. இதை அம்பாறை மாவட்ட மக்கள் புரிந்து நடப்பதுடன் இது குறித்த விழிப்பூட்டல்களை இளையோர் சமுதாயத்துக்கு ஊட்டுதல் வேண்டும்.
பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்தின் வழிபாட்டு நடைமுறைகள் என்னை வெகுவாக கவர்ந்து உள்ளன. காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம் ஆரம்பத்தில் இருந்ததை விட பிரமாண்ட தோற்றத்துடன் கம்பீரமாக காட்சி தருகின்றது. காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினரின் சமுதாய பணிகள் குறித்து கேள்விப்பட்டு மிகுதியான மன நிறைவு அடைந்து உள்ளேன். காரைதீவு சித்தானை குட்டி சமாதி கோவிலில் தியானத்தில் ஈடுபட்டபோது அங்கு சித்தரின் அருளாட்சி நிலவுவதை அனுபவித்தேன். கல்முனை சந்தான ஈஸ்வரர் கோவில் பஞ்ச தல இராஜபுரம் தங்கு தடைகள் எவையும் இன்றி விரைவாக எழும்ப வேண்டும். அதே போன்ற எழுச்சி கல்முனை இந்து பெருமக்களுக்கும் விரைவில் ஏற்பட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன். இந்து ஆலயங்கள் பரந்து விரிந்த அளவில் சமுதாய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.