மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்டபட்ட புதுநகர் பிரதேசத்தில் இயங்கும் மதுபான சாலைகளைக் குறைப்பது தொடர்பிலான 20ம் வட்டார மாநகரசபை உறுப்பினர் இரா.அசோக் அவர்களினால் மாநகரசபையின் 10வது அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்த ஆதரவினை வழங்கினர்.
இது தொடர்பில் இரா. அசோக் அவர்கள் தனது பிரேரணையில் குறிப்பிடுகையில்,
மட்டக்களப்பு மாநகரத்தில் அபிவிருத்திகள் குறைந்த கிராமங்களில் புதுநகர் பிரதேசமும் ஒன்றாகக் காணப்படுகின்றது. அவ்வாறானதொரு குறுகிய கிராமத்தில் இரண்டு மதுபானசாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மது விற்பனையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் கூழாவடி முதலிடத்திலும், இரண்டாவது இடமாக புதுநகர் பிரதேசமும் காணப்படுகின்றது. எமது பிரதேசத்தில் இருக்கின்ற மதுபானசாலைகளில் ஒன்று இரவு பத்து மணிக்குப் பின்னரும் திறந்தே காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் அன்றாடக் கூலித் தொழில் புரிபவர்களே அதிகம் காணப்படுகின்றனர். அவ்வாறு அவர்கள் உழைக்கின்ற பணம் இம் மதுபானசாலைகளில் செலவழிக்கப்பட்டு மிகுதியே அவர்கள் வீடுகளுக்குச் செல்கின்றது. இதனால் எமது குடும்பத் தலைவிகள் தான் அதிகம் கஷ்டப்படுகின்றனர். எனவே எமது பிரதேசத்தில் இயங்குகின்ற மதுபானசாலைகளில் ஏதேனும் ஒன்றையாவது குறைக்க வேண்டும் என்பதே இங்கு எனது முன்மொழிவாக வைக்கப்படுகின்றது.
அத்துடன் எமது இளைஞர் சமுதாயமும் மிகவும் ஒரு வேதனைக்குரிய நிலைமையில் சென்று கொண்டிருக்கின்றது. எதிர்கால சந்ததியினர் இந்த இளைஞர்கள். குறிப்பிட்ட சில இளைஞர்கள் இந்த மதுபோதைக்கு அடிமையாகிக் கொண்டு செல்கின்ற நிலைமையும் உள்ளது. எனவே எமது மக்களின், இளைஞர்களின் எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு இவ்வாறான விடயங்களை முன்னெடுத்து எமது சபை தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் கனவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். இந்த சபையில் ஒரு தீர்மானத்தனை நிறைவேற்றி அவருக்கு கொடுக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நகர்வினை அவர் மேற்கொள்வார் என்று அவர் தனது பிரேரணையை சமர்ப்பித்தார்.
இது தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா தெரிவிக்கையில், அசோக் அவர்களின் பிரேரணையுடன் ஒத்துப்போகின்ற அதே நேரம், இது எமது மாநகரசபையால் முடியுமோ முடியாதோ தெரியவில்லை. ஆயினும் இனிவரும் காலம் எமது மாநகரசபை எல்லைக்குள் எவ்வித மதுபானசாலைகளும் வருவதற்கு நாங்கள் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து உறுப்பினர் திலிப்குமார் தெரிவிக்கையில் ஒரு வட்டார மதுபானசாலைகளை மூடுவதற்கு மட்டுமல்ல இந்த மாநகரசபை எல்லைக்குள் இருக்கின்ற அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கும் நூறு வீத ஆதரவளிக்கின்றேன் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து திருமதி செல்வி மனோகரன் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக மதுபானசாலைகள் இயங்கிக் கொணடிருக்கின்றன அவற்றை மூடுவது தொடர்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும் அவை இயலாத நிலைமையில் உள்ளது எனவே இது தொடர்பில் நாம் இவ்வாறான பிரேரணையை நிறைவேற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் சிவம் பாக்கியநாதன் தெரிவிக்கையில் இந்த மதுபானசாலைகளுக்கு உரிமம் வழங்குகின்ற உரித்து கலால் திணைக்களத்திற்கே உரியது. அரசாங்க அதிபருக்குக் கூட அதனைத் தடுப்பதற்கு உரிமம் இல்லாத நிலைமையே இருக்கின்றது. எனவே கொண்டுவரப்பட்ட பிரேரணை எந்தளவிற்கு சாத்தியம் என்பதை விடுத்து இனிவரும் காலங்களில் மதுபானாசலைகள் திறப்பதற்கு அனுமதிக்காதவாறு இப்பிரேரணையை நிறைவேற்றுவது சிறந்தது என்று குறிப்பிட்டார்.
அதே போன்று உறுப்பினர் க.ரகுநாதன் தெரிவிக்கையில் இவ்வாறே தனது வட்டாரத்திலும் மதுபானசாலைகள் அதிகம் காணப்படுகின்றது. எனவே அவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் உறுப்பினர் சசிதரன் தெரிவிக்கையில் இதற்கு முன்னர் பாலமீன்மடு பிரதேசத்தில் அமைக்கப்பட இருந்த மதுபானசாலை மக்கள் போராட்டத்தினை அடுத்து தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன் சில அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோதமாக சில வீடுகளிலும் மதுபானம் விற்பனை இடம்பெறுகின்றது. எனவே இவற்றைத் தடுக்கும் முகமாகவும் எமது சபை மூலம் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இறுதியாக முதல்வர் கருத்துத் தெரிவிக்கையில் மட்டக்களப்பின் சனத்தொகை அடிப்படையில் எமது மாவட்டத்தில் இருக்க வேண்டிய மதுபானசாலைகளின் எண்ணிக்கை 19 தொடக்கம் 21 ஆனால் தற்போது 63 இருக்கின்றன. இவற்றைக் கொண்டு வந்தவர்கள் யார், எக்காலத்தில் இது விரிவடைந்தது, எவ்வாறு விரிவடைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கான பொறுப்புக்களை அவர்களே ஏற்றுக் கொள்ளட்டும். இந்த விடயம் தொடர்பில் எமது மாநகரசபை எல்லைக்குள் பல வியாபார நிலையங்கள் உரிய உரிமம் இல்லாமல் இயங்குகின்றன. அந்த அடிப்படையிலான பரிசோதனைச் செயற்பாடுகள் மூலம் இவற்றை; கட்டுப்படுத்துவதோடு அவர்களை உரிய உரிமத்தைப் பெறவைக்கும் ஏற்பாடுகளைச் செய்யலாம். அந்த ஏற்பாடுகளின் மூலம் நாங்கள் இந்த மதுபானசாலைகள் தொடர்பில் குறிப்பிட்ட வரையறைக்குள்ளான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.