மருதமுனை காரியப்பர் வீதியின் புனரமைப்பு வேலைத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது இப்பிரச்சினை குறித்து பிரஸ்தாபித்து, கலந்துரையாடியபோதே முதல்வர் இதனை வலியுறுத்தினார்.
மருதமுனை காரியப்பர் வீதியை, காபர்ட் வீதியாக புனரமைப்பு செய்தபோது, அவ்வீதியின் ஒரு பகுதி சரியாக செப்பனிடப்படாமலும் வடிகான் குழிகள் மூடப்படாமலும் கைவிடப்பட்டிருப்பதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று முதல்வர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்வீதி புனரமையப்பு செய்யப்பட்டு நீண்ட காலமாகியும் இன்னும் இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் இருப்பது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்ட முதல்வர், பிரதேச மக்கள் இது விடயத்தில் பெரும் விசனமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியதுடன் இப்பிரச்சினையை துரிதமாக முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள்; ஒப்பந்தக்காரர்கள் தரப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் இக்குளறுபடிகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் நாளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள முக்கிய கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் உறுதியளித்தனர்.