• இருவர் பலி : எழுவர் சிகிச்சையில்..
• மரணபீதியீல் மக்கள் அல்லோலகல்லோலம்..
• முழுக்கிராமமே இடம்பெயரும் அவலத்தில்..
• மல்லிகைத்தீவு மயானபூமியாகும் அச்சம்!
• அதிகாரிகள் விரைந்து கவனிப்பார்களா?..
• தே.நீ.வ.வ.சபைதான் தீர்வு தரவேண்டும்…
• சம்மாந்துறை பிரதேசசபை என்னசெய்கிறது?
அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தையையடுத்துள்ள மிகவும் பின்தங்கிய மல்லிகைத்தீவு கிராம தமிழ்மக்கள் இன்று மரணபயத்துடன் வாழ்க்கையை ஓட்டும் நிலையேற்பட்டுள்ளது. ஆம் அவர்கள் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு போராடும் நிலை.
மல்லிகைத்தீவிலுள்ள பொதுக்கிணறு உள்ளிட்ட சகல 42கிணறுகளிலும் கல்சியம் மற்றும் விவசாயத்திற்குப்பயன்படும் இரசாயனப்பொருட்கள் கலந்துள்ளதால் நீர் நஞ்சாகமாறிவருகிறது. அதனால் அங்குள்ள மக்கள் சிறுநீரக நோய்க்கு ஆளாகிவருகின்றனர்.
கடந்தாண்டு ரி.சின்னத்துரை(வயது 54) கே.சுப்பிரமணியம்(வயது 67) ஆகிய இருவர் இந்நோயினால் மரணித்துள்ளனர்.
தற்போது பதின்மருக்கும் மேற்பட்டோர் குறிப்பாக குடும்பஸ்தர்கள் மாதாந்தம் மட்டக்களப்பு அம்பாறை போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களில் எஸ்.தெய்வேந்திரன்(வயது40) எஸ்.புவனேஸ்வரி(வயது 64) ரி.புஸ்பராணி(வயது 60) என்.நல்லதம்பி(வயது 68) இ.கவிதா(வயது 38) ஏ.காராளசிங்கம்(வயது60) ஆகியோர் நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உயிருக்கப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தப்பேராபத்தை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்வேண்டுமென அந்த கிராமமக்கள் மன்றாட்டமாகக்கேட்டுள்ளனர். குறிப்பாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இக்கிராமத்திற்கென நீர்வழங்கலை வழங்கவேண்டும். அதற்கான அமைச்சரும் கண்திறக்கவேண்டும்.
அந்த மக்கள் சம்மாந்துறைப்பிரதேசசபையின் உபதவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான வெ.ஜெயச்சந்திரனைச்சந்தித்து தாம் எதிர்நோக்கும் பேராபத்து பற்றி விளக்கிக்கூறியுள்ளனர்.
மல்லிகைத்தீவின் அமைவிடம்
அம்பாறை- கல்முனை பிரதானவீதியில் கேந்திரமுக்கியத்துவம்வாய்ந்த ஒரு நாற்சந்தியுடன் கூடிய மல்வத்தை எனும் கிராமமுள்ளது.
அந்தச்சந்தியிலிருந்து இடதுபுறமாக இரண்டரைகிலோமீற்றர் தொலைவில் மல்லிகைத்தீவு எனும் குக்கிராமம் அமைந்துள்ளது. சம்மாந்துறை பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட இக்கிராமம் வயல்களால் முற்றுமுழுதாகச் சூழப்பட்டது. அமைதியான இயற்கையோடு இணைந்து வளமான வாழ்க்கை வாழ்ந்துவந்த அவர்களுக்கு; இன்று பேரிடி ஏற்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் 95 குடும்பங்களைச்சேர்ந்த 278 தமிழ்மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ஒரேயொரு ஆரம்பப்பாடசாலை. இரு ஆசிரியர்களுள்ளனர். 50க்கும் குறைவான பிள்ளைகள்.
பஸ்போக்குவரத்து இல்லை. ஏனையவசதிகளும் குறைவு. ஆதலால் மக்கள் தொகை வரவரக்குறைவடைந்து செல்லும் நிலையில் சிறுநீரகநோய் என்ற இந்தப் பேரபாயம் தோன்றியுள்ளது. இதனால் ஓரளவு வசதியுள்ள மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலைநீடித்தால் கிராமமே முற்றாக இல்லாமல்போகும்நிலையேற்படலாம்.
இன்றைய நிலை வரக்காரணம்!
மல்லிகைத்தீவு கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் பி.மூர்த்தி (வயது 40) அங்குள்ள நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கையில்:
எமது கிராமத்தில் 95 குடும்பங்கள் இருந்தாலும் 42கிணறுகளே உள்ளன. கூட்டுக்குடும்பமுறைமை அதற்குக்காரணம்.
இந்த 42கிணறுகளில்தான் குடிநீர் தொடக்கம் நீராடுதல் வரையான சகல தேவைகளும் நிறைவுசெய்யப்பட்டுவந்துள்ளன.
2013 இல் ஜெய்க்கா திட்டத்தின்கீழ் பாரிய கிணறுஒன்று வெட்டப்பட்டு தண்ணீர்த்தாங்கி அமைக்கப்பட்டு அதனூடாக ஊருக்கு சிறுகுழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. அதற்கு குளோரினும் பக்கத்தால் வழங்கப்பட்டது.
சிறிதுகாலம் செல்ல இந்த நீரிலும் ஒருவித மாற்றம் தென்படஆரம்பித்தது. அதனால் தற்போது இந்தநீரை குளிக்க மாத்திரமே பயன்படுத்திவருகிறார்கள்.
2016களில் இங்குள்ள சகல கிணறுகளிலும் இருந்த நீர் கல்சியமும் சூழவுள்ள வயல்களுக்குப் பாவிக்கப்படும் கிருமிநாசினிகளின் தாக்கமும் ஆதிக்கம்செலுத்தின. சுருக்கமாகக்கூறினால் மாசாகி நஞ்சுதன்மை நிலவியது.
அதன்வெளிப்பாடாக மக்கள் மத்தியில் சிறுநீரகநோய் ஆரம்பித்தது. அரம்பத்தில் மக்களுக்கு அது தெரியாமலே இருந்தது.
நோய் அறிகுறிகள் திவீரமாகியபோது மட்டக்களப்பு அம்பாறை வைத்தியசாலைகளுக்குச் சென்றபோதுதான் சிறுநீரகநோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
அதன் காரணமாக கடந்தாண்டு கடந்தாண்டு ரி.சின்னத்துரை(வயது 54) கே.சுப்பிரமணியம்(வயது 67) ஆகிய இருவர்; மரணித்துள்ளனர்.
தற்போது பதின்மருக்கும் மேற்பட்டோர் குறிப்பாக குடும்பஸ்தர்கள் மாதாந்தம் மட்டக்களப்பு அம்பாறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களில் எஸ்.தெய்வேந்திரன்(வயது40) எஸ்.புவனேஸ்வரி(வயது 64) ரி.புஸ்பராணி(வயது 60) என்.நல்லதம்பி(வயது 68) இ.கவிதா(வயது 38) ஏ.காராளசிங்கம்(வயது60) ஆகியோர் நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
தேசியநீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை எல்லா இடங்களிலும் நீர் வழங்கிவருவதைப்போன்று எமது கிராமத்திற்கும் குழாய்களைபதித்து நீர்வழங்கினால் மட்டுமே இந்தப் பேராபத்திலிருந்து தப்பலாம். இல்லாவிடில் மல்லிகைத்தீவு மயானபூமியாகும். பின்பு இங்கு யாரும் வரத்தேவையில்லை என்றார்.
சிறுநீரகநோயினால் பாதிக்கப்பட்ட இருவரைச்ச்தித்துக் கலந்துரையாடினேன்.
திருமதி எஸ்.புவனேஸ்வரி(வயது64) கூறுகையில்:
எனக்கு 4பிள்ளைகளுண்டு. அவரும் இல்லை. எமது கிணற்றுநீரால் வந்த வினையே இது.கஸ்ட்டமாகவிருக்கிறது. சிறுநீரகநோய்க்கு அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகிறேன். பிள்ளைகளை எண்ணி வேதனையடைகின்றேன். என்றார்.
எஸ். தெய்வேந்திரன்(வயது40) குடும்பஸ்தர் கூறுகையில்: கடந்த இருவருடங்களாக இந்நோயினால் அவதியுற்றுவருகின்றேன். எமது கிராமத்து கிணறுகளிலிருந்து பெறும் நீரிலே இதற்கான மாசுத்தன்மை இருப்பதாக பரிசோதனையிலிருந்து தெரியவந்தது. மட்டகக்ளப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகிறேன். எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.
சம்மாந்துறை பிரதேசசபையின் உப தவிசாளர் வெ.ஜெயச்சந்திரனிடம் கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
என்னிடம் கடந்த வாரம் இந்த மக்கள் வந்து இந்த ஆபத்தான நிலை பற்றிக்கூறினார்கள். உடனடியாக நான் இவ்விடயத்தை அம்பாறை நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை பொறியியலாளருக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தினேன். எமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கும் தெரியப்படுத்தினேன்.
அதைவிட எமது சபையினால் வாரமிருமுறையாவது பவுசரில் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறேன். என்றார்
இந்தப்பேராபத்தை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்வேண்டுமென அந்த கிராமமக்கள் மன்றாட்டமாகக்கேட்டுள்ளனர்.
அந்தமக்கள் தற்போது கிணற்றிலிருந்து எடுக்கும் தண்ணீரை சுடவைத்துக் குடிக்கிறார்கள். நிலைமை தொடர்ந்தால் ஊரைவிட்டு இடம்பயெரநேரிடும் என அழாக்குறையாகத் தெரிவிக்கிறார்கள்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பர்களா? அதற்கு இந்த மக்களை ஆளும் சம்மாந்துறைப்பிரதேசசபையினர் உதவுவார்களா? இதுதான் அந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்