ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு, குறித்த பிரேரணை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் இன்று கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் அரசாங்க நிதியை செலவிட முடியாதபடி செய்வதற்கான ஷரத்துகள் இதில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
இந்த பிரேரணையை எதிர்வரும் 29ஆம் தேதி நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்தி, அன்றைய தினமே வாக்கெடுப்பை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சியான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைக் கூறியிருந்தார்.
நாட்டுக்கான செலவினங்களை செய்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யும் அனைத்து அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு உள்ளது என்ற அடிப்படையிலேயே, அரசியலமைப்பின் 148ஆவது உறுப்புரிமையின் படி இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையானது, அடையாள ரீதியான பிரேரணையென அவர் இதன்போது கூறியிருந்தார்.
நாட்டில் ஸ்திரமற்ற நிலைமைகள் தொடரும் பட்சத்தில், அனைத்து அமைச்சுக்களுக்குமான நிதியை செலவிட முடியாத நிலைமையை தமது தரப்பினரால் ஏற்படுத்த முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தில் தங்கள் தரப்புக்கே பெரும்பான்மை உள்ளதால், அந்த நடவடிக்கையை எடுப்பதற்கான வலிமை தம்வசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், பிரதமர் செயலாளருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணையானது, அடையாள ரீதியாக, அரசாங்கத்திற்கு எச்சரிக்கையை விடுக்கும் வகையிலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரேரணைக்கு காலக்கெடு கொடுத்து, விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்குமாறு தாம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்துவதற்கு தாம் இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், அதற்கு ஆளும் தரப்பினர் இணக்கத்தை வெளியிட்டிருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
ஜனநாயகமுள்ள நாடுகளின் நாடாளுமன்றங்களில் ஒரு கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டால், பிரதமராக பதவி வகிப்பவர் தமது பதவியை ராஜினாமா செய்வது வழக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்ச்சியான மூன்று தடவைகள் வெற்றி பெற்றிருந்த போதிலும், அவர் இதுவரை தனது பதவியிலிருந்து விலகவில்லை என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அதனை எதிர்கொள்ள தாம் எந்த சந்தர்ப்பத்திலும் தயாராக இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியான அமளி துமளி ஏற்பட்டு வருகின்ற நிலையில், இன்றைய தினமும் நாடாளுமன்றம் பிற்பகல் 1.30க்கு கூடியது.
பிரதி சபாநாயகர் ஜே.எம்.ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடிய நாடாளுமன்றம், சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.
இதன்படி, நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 23-ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.