மாகாணசபை தேர்தல் நடத்துவதில் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு ஒத்த கருத்து இல்லை!பா.அரியநேத்திரன் மு.பா.உ,

மாகாணசபை தேர்தல் நடத்துவதில் ஆட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு ஒருமித்த கருத்துகள் இல்லை இந்தியாவை சமாளிக்கும் வெறும் வார்தைகளே மாகாணசபை தேர்தல் தொடர்பான செய்தி என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
 
மாகாணசபை தேர்தல் தொடர்பாக மேலும் கருத்து கூறுகையில்
 
அண்மையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு தேர்தல் முறை மறுசீரமைப்பு பற்றிய கூட்டம் நடைபெற்றது. இந்த தெரிவுக்குழுவிற்கு தற்போது புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் நியமிக்கப்பட்டுள்ளார்.இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது மாகாணசபை தேர்தலை ஒரு சிறிய சட்ட திருத்தத்தின் மூலமாக முன்னர் இருந்த தேர்தல் முறையையே பின்பற்றி தேர்தல் நடத்த முடியும் என்ற கருத்தை எமது கட்சி பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தியிருந்தார்.
 
அதனடிப்படையில் விரைவாக மாகாணசபை தேர்தலை நடத்துவதாக நிதி அமைச்சர் பஷீல் ராசபக்கச தெரிவித்த கருத்துகள் பல ஊடகங்களில் வெளிவந்தன.
 
இந்தியாவின் அழுத்தம் காரணமாக விரைவாக மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற எண்ணம் தற்போதய அரசுக்கு இருந்தாலும் உண்மையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான எண்ணம் அரசு தரப்புக்கு இல்லை.
 
தற்போதய சூழலில் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் தற்போது ஆட்சியில் இருக்கும் பொதுஜனபெரமுன அரசு படுதோல்விகளை சந்திக்கும் என்பது அவர்களுக்கு நன்கு விளங்கும் அதனால் மாகாணசபை தேர்தல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்காமல் காலத்து இழுத்தடிக்கும் நிலையையே அவதானிக்க முடிகிறது.
 
இதன் வெளிப்பாடு நிதி அமைச்சர் பஷீல் ராஷபக்‌ஷ மகாணசபை தேர்தலை விரைவாக நடத்த தாம் தயார் என கூறி 24, மணித்தியாலங்கள் கடக்கும்முன்னமே இன்னுமொரு அமைச்சரான தினேஷ் குணவர்தனா மகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தமுடியாது சட்ட திருத்தங்களை பாராளுமன்றத்தில் கொண்டு செல்ல கால அவகாசம் தேவை என கூறியுள்ளார்.
 
இதிலிருந்து கவனிக்கவேண்டியது அரசில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் தாம் மாகாணசபை தேர்தல் தொடர்பாக தாம் விரும்பியதை கதைப்பதும் காலத்தை இழுத்தடித்து தமக்கு மக்கள் செல்வாக்கு வரும்வரை மாகாணசபை தேர்தலை்நடத்தாமல் இழுத்தடிப்பு செய்வதையும் காணலாம்.
 
எதிர்வரும் நவம்பர் 12.ல் வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் சமர்பித்து அதை பாராளுமன்றில் நிறைவேற்றுவதற்காக எதிர்கட்சியில் உள்ள சில கட்சிகளின் ஆதரவையும் பெறும் வகையில் பஷீல் ராஷபக்ச மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துவதாக கூறி சில கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக இவ்வாறு கூறி இருக்கலாம் என்ற சந்தேகமும் எமக்கு உண்டு.
 
இந்திய அரசும் இலங்கை அரசுடன் மாகாணசபை தேர்தல் 13,வது அரசியல் யாப்பு மூலமான அதிகாரப்பகிர்வு என அடிக்கடி கூறுகிறார்களே தவிர இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கி இதனை உடனடியாக செய்யுமாறு கூறுவதில்லை அவர்களும் இந்த விடயத்தில் வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் பழைய பல்லவிகளை பாடிவிட்டு மௌனம் காக்கின்றனர்.
 
மாகாணசபை தேர்தல் இழுத்தடித்து அதை நடத்தாமல் காலத்தை வீண்டிக்குக்கும் பொறுப்பு கடந்த நல்லாட்சி அரசுக்கும் உண்டு. அவர்கள் நினைத்திருந்தால் அவர்களின் ஆட்சியில் ஜனாதிபதியாக இலுந்த மைத்திரிபால சிறுசேனாவும், பிரதமராக இருந்த ரணிலும் அதை செய்திருக்கலாம் அவர்களுக்கும் மாகாணசபை தேர்தலை நடத்த அக்கறை இருக்கவில்லை தற்போதய குடும்ப ஆட்சியாளருக்கும் மாகாணசை தேர்தலை்நடத்த அக்கறை இல்லை இதுதான் உண்மை எனவும் மேலும் கூறினார்.

Related posts