இளைஞர் அபிவிருத்தி பணிகளில் இன மற்றும் பிரதேச வாதங்கள் எதுவுமின்றி நேர்மையான முறையில் தேசிய நலன்களைக் கவனத்திற் கொண்டு செயற்பட்டுவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் சாய்ந்தமருதிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கிவருகிறது. அதனை அம்பாறை நகரத்திற்கு கொண்டு செல்ல வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்தி அவ்விடத்திலையே தொடர்ந்தும் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து முன்னோடி இளைஞர்கள் சிலர் அரச மேல்மட்டத்திற்கு அனுப்பவேண்டி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கிடம் மகஜரொன்றை இன்று (03) மாலை கையளித்தனர்.
இளைஞர் பாராளுமன்ற கப்பல் துறைமுகங்கள் பிரதியமைச்சர் எஸ்.எம். றிஹான் தலைமையிலான தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கூட்டுறவு (நிஸ்கோ) முன்னாள் பணிப்பாளர் யு.எல்.என். ஹுதா உமர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நிஸ்கோ மாவட்ட கிளையின் பணிப்பாளர்சபை உறுப்பினர் ஹிஸாம் ஏ பாவா அடங்கிய இளைஞர்கள் மகஜரை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். அதன்போது, 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் எவ்வித தடைகளுமின்றி முறையாக இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் சிலர் ஈடுபட்டு வருவதையிட்டு மிகுந்த மன வேதனை அடைகின்றோம் என்றனர். மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஓரிரு உத்தியோகத்தர்களுக்காக எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தமிழ் பேசும் இளைஞர்கள் பயன்பெறும் குறித்த அலுவலகம் ஏன் மாற்றப்பட வேண்டும் ? நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வு பற்றியும் இளைஞர்களின் அபிவிருத்தி பற்றியும் மக்களும் அரசாங்கமும் கருத்து கூறிவரும் இச் சூழ்நிலையில் அதனைச் சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக கிள்ளி எறிய வேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும்.
எனவே சாய்ந்தமருதில் இயங்கிவரும் கிழக்கு மாகாண அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் அதே இடத்தில் மேற்கொள்ளும் வகையில் அதற்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் ஜனாதிபதி, பிரதமர், இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தவிசாளர் ஆகியோர் தலையிட்டு இவ்வநீதிக்கு எதிராக நீதியை பெற்றுத்தரவேண்டும் என்றனர்.