மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி கருத்தரங்கு

மட்டக்களப்பு சுதந்திர மனித அபிவிருத்திக் கழகத்தின் ஏற்பாட்டில் இம்முறை ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி கருத்தரங்கு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் இன்று நடைபெற்றது.

 
ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி கருத்தரங்கில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை, நாசிவந்தீவு சிவ வித்தியாலயம், கல்மடு விவேகானந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
சுதந்திர மனித அபிவிருத்திக் கழகத்தின் கல்குடாத் தொகுதி இணைப்பாளர் ஊடகவியலாளர் ந.குகதர்சன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன், கலந்து கொண்ட பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
 
இக்கருத்தரங்கில் வாழைச்சேனை பிரதேசத்தின் ஐந்தாம் தரத்திற்கான பிரபல ஆசிரியர் பி.தயாபரன் வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கான முன்னாயத்த பரீட்சை மற்றும் அதற்கான விளக்கங்களை வழங்கி வைத்தார்.
 
இக்கருத்தரங்கிற்கு கனடா சுதந்திர மனித அபிவிருத்திக் கழகம் மற்றும் கனடா தளிர் ஊடகம் அனுசரணை வழங்கி உள்ளதுடன், சுதந்திர மனித அபிவிருத்திக் கழகமானது வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சி, வறிய குடும்பங்களின் வாழ்வாதார திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார திட்டங்கள் உட்பட்ட பல்வேறு வேலைத் திட்டங்களை இலங்கையிலுள்ள தமிழ் உறவுகளுக்கு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
dav

Related posts