இந்த நாட்டில் கடந்த முப்பது வருடமாக தமிழ்மக்கள் யுத்தம் காரணமாக பாரிய அழிவை சந்தித்தனர். உடமைகளையும் உயிரையும் இழந்தனர். அழியாத வடுக்களை நெஞ்சில் சுமந்தவர்களாக வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றனர்.
பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த தமிழ் மக்களுக்கு கூடவே சேர்ந்து வாழ்ந்து வந்த இன்னொரு சகோதர இனத்தினால்தான் அடுத்த மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுவருவது ஒரு மிகமோசமான சாபக்கேடு என்றுதான் கூறவேண்டும்.’
இவ்வாறு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் இந்து சம்மேளனத்தின் முதலாவது மக்கள் சந்திப்பில் உரையாற்றிய இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்கள் தெரிவித்தார்.
இந்து சம்மேளனத்தின் அக்கரைப்பற்று இணைப்பாளர் திரு.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இம்மக்கள் சந்திப்பின்போது கலந்துகொண்ட பிரதிநிதிகளால் பல்வேறு பிரச்சினைகளை இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
கலந்துரையாடலில் கூறப்பட்ட விடயங்களுக்கு பதிலளித்து பேசிய அருண்காந்த் அவர்கள் தொடர்ந்தும் கூறியதாவது ‘நாம் தொடர்ந்தும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உட்பட்டு வருகின்றோம்.குறிப்பாக தமிழ் மக்களுடைய நிலங்கள் கிழக்கு மாகாணத்தில் பாரிய அளவில் கபலீகாரம் செய்யப்பட்டு வருகின்றது.
அதிர்ச்சியும் கவலையும் தரும் விடயம் என்னவென்றால் எமது சகோதரர்களாக யாரை சேர்த்துக்கொண்டு கடந்த காலத்தில் உரிமை சார்ந்து பல கனவு கோட்டைகளைக் கட்டினார்களோ அவர்களாலேயே தமிழர்களது நிலங்கள் அபகரிக்கப்படுவதுதான் சோகமான விடயம்.வெறும் நிலப்பரிப்பு மட்டுமன்றி
தற்போது எமது பாடசாலைகள், பண்பாடு, தொழில்வாய்ப்புகள் …குறிப்பாக தொண்டராசிரியர் நியமனம் என்று எல்லாமே தாக்குதல்களுக்கு உள்ளாவதுடன் தமிழ் மக்களது வாயப்புக்கள் அநீதியாக தட்டிப்பறிக்கப்படுகின்றது.
பல பிரச்சினைகளுக்கு மத்தியில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் இச்சந்திப்பு நடைபெறுகின்றது. இங்கு உரையாற்றிய சிலர் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பாரிய அளவில் ஊழல் மோசடியில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டியதுடன் தமிழ் மக்களுக்கெதிராக செயற்படுவதாக குற்றம்சாட்டினர்.
ஆலயடிவேம்பு பெரிய களப்பு என்றழைக்கப்படும் இலங்கையின் இரண்டாவது பெரிய களப்பை முஸ்லிம் இனத்தைச் சேர்நத பெருமளவானவர்கள் பாரிய அளவில் கைப்பற்றி தமிழ் பிரதேசங்களை சுற்றிவலைத்து வருவதாகவும் இக்களப்பு அமைந்துள்ள பிரதேசத்தில் ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளருக்கும் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட காணியுண்டு எனறும் சிலர் கூறியது எமக்கெல்லாம் அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாகவுள்ளது.
வேலியே பயிரை மேய்ந்த கதையைத்தான் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. நீங்கள் கூறிய குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்து அவற்றில் உண்மைத்தன்மை இருப்பின் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்புத் துறைக்கு இது தொடர்பாக முறைப்பாடு அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வளவு முக்கியமான பதவிகளில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
எது எவ்வாறெனினும் நாம் எமது சமுதாயத்தை அமைப்பு ரீதியாக நன்கு ஒருங்கிணைக்கவேண்டும். நாடு முழுவதும் சக்திவாய்ந்த வலையமைப்பை ஏற்படுத்தவேணடும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் மட்டுமே எம்மை நோக்கி வருகின்ற எத்தகைய சவால்களையும் முறியடிக்கலாம்’ என்றார்.