நூருள் ஹுதா உமர்.
அம்பாறை மாவட்டம் மாளிகைக்ககாட்டுத் துறையில் இருந்து கடந்த 18.09.2019ம் திகதி மூன்று மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ஆழ்கடல் இயந்திரப் படகு எட்டு நாட்களாகியும் இதுவரை கரைதிரும்பவில்லை என அவர்களின் குடும்பத்தினர் மிக்க துக்கத்துடனும் பாரிய எதிர்பார்ப்புக்களுடனும் காத்திருக்கின்றனர்.
சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36), இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) , காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்துள்ளனர்
இவர்கள் பற்றிய தகவல்களை இலங்கை பொலிஸ், கடற்படை ஆகியோருக்கு ஆரம்ப நாள்முதல் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் கடந்த ஆறு நாட்களாக கடலில் பல இலட்சம் ரூபாய்களை செலவழித்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருந்தும் தேடுதல் தோல்வியிலையே முடிந்துள்ளது.
இந்த மக்களுக்கு உதவுவதாக அரசியல்வாதிகள் பத்திரிக்கை அறிக்கைகள் விடுப்பதுடன் இந்த விடயம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை என பிரதேச மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அத்துடன் மீனவ சங்கங்களின் அடுத்த கட்ட முயற்சியாக தலைநகருக்கு சென்று அங்குள்ள உயரதிகாரிகள் மற்றும் குறித்த இலாக்காவுக்கு பொறுப்பான அமைச்சருடனும் பேசி தேடுதலை விஸ்தரிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.