முன்னாள் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட இராஜதந்திரியுமான ஏ.எல்.ஏ.அஸீஸூக்கும் சிலோன் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்றிரவு (24) திங்கட்கிழமை சாய்ந்தமருது சீ பிரீஸ் ரெஸ்ட்டோரண்டில் இடம்பெற்றது.
இதன்போது சிலோன் மீடியா போரத்தினை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வெளிநாட்டு ஊடக அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதும் பணியாற்றுவது சம்பந்தமாக ஆராயப்பட்டது.
மேலும் ஊடகவியலாளர்களுக்கு வெளிநாட்டு ஊடக நிறுவனங்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொடுத்தல், அவர்களின் ஆளுமை, திறன்களை விருத்தி செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுதல் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பிலும் சமகால அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் தலைமைகளும் தேசியக் கட்சியில் முஸ்லிம்கள் பயணிப்பது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இக்கலந்துரையாடலில் சிலோன் மீடியா போரத்தின் பணிப்பாளர்களான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூவக்கர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா, அம்பாறை கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் மஜீத், பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் யூ.எல்.நூருல் ஹூதா, பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், பிரதிச் செயலாளர் எம்.எம்.ஜபீர், செயற்குழு உறுப்பினர்களான எம்.வை.அமீர், எம்.என்.அப்றாஸ், எம்.பீ.எம்.றின்சான், ஏ.எல்.நயீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிலோன் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினார்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களால் முன்னாள் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட இராஜதந்திரியுமான ஏ.எல்.ஏ.அஸீஸூக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.