முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சுயநல அரசியலால் முஸ்லிம் சமூகம் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சுயநல இலாபத்திற்காக பொய்களை சொல்லி வாக்கை பெறுகின்றனர். இதனால் முஸ்லிம் சமூகம் தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என அதிமேதகு ஜனாதிபதியன் சட்ட ஆலாசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம்.அலி சப்றி தெரிவித்தார்.
 
சமகால அரசியலும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களும் எனும் தலைப்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் தலைமையில் (31) கல்முனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்னால் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து இங்கு விளக்கமளிக்கும் போது,
 
சுயநலத்திற்காக பொய்களை சொல்லி இங்கு வந்து வாக்கை பெற்றுக்கொண்டு இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கத்திற்கும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப்பக்கத்திற்கும் லாபமீட்டும் டீலர்களாக செயற்பட்டார்கள். சமூகத்திற்கு எதனையும் செய்யவில்லை. 2005 ம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவிடம் நாட்டை கொடுத்த போது எல்.ரி.ரி பயங்கரவாதிகளை அழித்து முழு நாட்டையும் பாதுகாத்து முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்களையும் பாதுகாத்ததற்கு நாம் செய்த கைமாறு என்ன?
ஒரு நல்ல தலைவன் ஆட்சிக்கு வரும் போதுதூன் நாட்டில் பாதுகாப்பு இருக்கும். பாதுகாப்பு இருந்தால் அச்சம் இல்லாமல் வாழமுடியும். பாதுகாப்பு இருக்க வேண்டுமானால் இனங்களுக்கிடையில் ஒற்றுமை இருக்க வேண்டும். ஒற்றுமை இருக்க வேண்டும் என்றால் இனரீதியான கட்சிகள் இருக்கக்கூடாது. இதனை அறிந்திருந்ததால் தான் அன்று மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் 2000ம் ஆண்டுடன் முஸ்லிம் காங்கிறஸ் என்ற கட்சிக்கு பதிலாக நுஆ என்ற புதிய பெயரை பிரகடனம் செய்யபோவதாக அறிவித்தார்.
‘எந்த சமூதாயம் தன்னுடைய தலைவிதியை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ்வும் அந்த சமூகத்தின் தலைவிதியையும் மாற்றமாட்டான்’ என்று அஸ்ரப்; அடிக்கடி சொல்லுவார்.
 
நாட்டை அபிவிருத்தி செய்யும் போது அதன் பலனை நாட்டில் வாழும் எல்லா இன மக்களும்தான் அனுபவிக்கின்றனர். எனவே நாட்டை கட்டியெழுப்புவதற்கும் முன்கொண்டு செல்வதற்கும் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. இனவாத கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தேசிய கட்சிக்கு ஆதரவளித்து புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம் என்றார்.
 
இந்த விளக்கமளிக்கும் பொதுக்கூட்டத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் எம்.யு.எம்.உவைஸ் முகம்மட், தேசிய லொத்தர் சபையின் தலைவரும் இளைஞர் விளையாட்டுத்துறை விவகார அமைச்சின் பிரத்தியோக செயலாளர் லலீத் பியூம் பெரேரா, கல்முனை தொகுதி சுதந்தரக்கட்சியின் அமைப்பாளர் சட்டத்தரணி யு.எல்.நிஸார், உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் உட்பட அரசியல் பிரமுகர்கள், கல்வியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 
இதில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு பிரதேசத்தின் அரசியல் பிரமுகர்கள் நினைவுச்சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

Related posts