மூன்று தசாப்த காலமாக சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலைக்காக நாம் தொடர்ந்தும் முன்னிற்போமென,
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒரு பொறிமுறையினை உருவாக்க வேண்டுமெனக் கோரி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்றியிடம் மகஜர் ஒன்றினை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தொரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களிலும் தொடர்ச்சியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடி வந்த நாங்கள் தொடர்ந்துமாக தற்போது இருக்கின்ற இந்த அரசாங்கத்தின் ஊடாக இவர்களின் விடுதலைக்கான ஒரு பொறிமுறையை உருவாக்கி மிக விரைவில் இவர்களை விடுதலை செய்வதற்கான முன்னெடுப்புக்களை கட்டாயம் முன்னெடுத்தேயாகுவோம், காரணம் இந்த கைதிகள் மூன்று தசாப்தங்களை தாண்டியும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள், நாங்கள் இவர்களது விடுதலை தொடர்பில் கெளரவ ஜனாதிபதியிடமும் கதைத்துள்ளோம், இவர்களது விடுதலையினை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்.
இவர்களது குடும்பங்கள் மூன்று தலைமுறையாக அனுபவித்துவரும் இன்னல்களை நாமறிவோம், இவர்களது விடுதலைக்கான பொறிமுறையினை நீதியமைச்சர் மிக விரைவில் மேற்கொண்டு இவர்களை மிக விரைவாக விடுதலை செய்வார் என நம்புகின்றோமென தெரிவித்திருந்தார்.
குறித்த கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதியமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் சிலரும் இணைந்து கைதிகளின் விடுதலைக்கான பொறிமுறையினை உருவாக்க வேண்டுமென்பது தொடர்பான மகஜரினை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.