மூன்று பகுதிகளால் வாகரைப் பிரதேச செயலக நிலங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சி… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா)

வாகரைப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நிலங்களை மூன்று பகுதிகளால் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு எதிராக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற மாவட்டத்தின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்துச் செயற்பட வேண்டும். அரசுடன் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைக்கு பூரண ஆதரவு வழங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
 
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோணிதாண்டமடு பிரதேசத்தின் ஒரு பகுதி பொலநறுவை மாவட்டம் வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவினுள் இணைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வாகரைப் பிரதேச செயலாளருடன் இது தொடர்பில் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
கடந்த சில நாட்களாக வாகரைப் பிரதேசத்தில் இருந்து தோணிதாண்டமடு என்கின்ற பிரதேசத்தின் ஒரு பகுதி பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படப் போவதாகக் தகவல்கள் வந்தன. அந்த வகையில் இன்றைய தினம் வாகரைப் பிரதேச செயலாளரைச் சந்தித்து இது விடயமாக கலந்துரையாடி விபரங்களைப் பெற்றுக் கொண்N;டன். எல்லை நிர்ணய சபையினால் வாகரைப் பிரதேசத்தில் நாங்கள் பாரியதொரு பிரச்சனையை எதிர்கொள்ள இருப்பதாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
 
அதாவது வாகரைப் பிரதேசத்தில் இருந்து மூன்று பகுதியால் பிரதேசங்கள் பிரித்து எடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவதாக தோணிதாண்டமடு தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தின் ஒரு பகுதி தமிழ் மக்களுடன் சேர்த்து வெலிகந்தை பிரதேசத்துடன் சேர்க்கப்பட இருப்பதாகவும், அதே போன்று ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகப் பிரிவுடன் புணானை கிழக்கு, கிருமிச்சை, காயான்கேணி, வட்டவான் உள்ளிட்ட சில பிரதேசங்கள் இணைக்கப்படுவதற்கான முயற்சிகளும், மறுபக்கம் வடக்கிலே வெருகல் இரட்டை ஆற்றை ஒட்டிய பிரதேசம் வெருகல் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அறிகின்றேன்.
 
மூன்று பக்;கத்தினால் வாகரைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களைப் பிரித்தெடுப்பதற்கான அழுத்தங்களைக் கொடுத்து ஒரு பகுதியையாவது முழுமையாகக் கைப்பற்றக் கூடிய முயற்சியாகவே நான் இதனைக் கருதுகின்றேன். அது ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகத்துடன் காயான்கேணி, வட்டவான், புணானை கிழக்கு, கிருமிச்சை போன்ற பாரியதொரு நிலப்பரப்பினை இணைத்து ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகத்தினை வெலிகந்தை வரை விஸ்தரிப்பதற்கான செயற்பாடாகவே இதனைக் கருதுகின்றேன்.
 
அந்த வகையில் தமிழ்ப் பிரதேசம் என்பதற்கும் அப்பால் காலாகாலமாக வாகரைப் பிரதேச செயலக நிருவத்திற்குட்பட்டு வாழும் மக்களும், நிலங்களும் வாகரைப் பிரதேச செயலகத்துடன் இருந்தவாறே இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் அரசுடன் இணைந்திருக்கின்றார்கள். ஒருவர் கடந்த காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்தவர் தற்போதும் அப்பதவியை எதிர்பாத்துக் காத்துக் கொண்டிருக்கின்றார். மற்றையவர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தவர். தமிழ் மக்களுக்காகப் போரடிய போராட்ட இயக்கத்தில் இருந்தவர் தற்போது இந்த அரசின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக இருக்கின்றார்.
 
இவர்கள் இந்த விடயத்தில் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் இந்தப் பிரதேசத்திலே இந்த மக்களின் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர். அவர் இந்த விடயத்திலே இன்னும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களைப் பொருத்த மட்டில் நாங்கள் இவ்விடயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்போம்.
 
என்னைப் பொருத்த மட்டிலே இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கின்றது. ஓட்டமாவடி மத்தி என்கின்ற பிரதேச செயலகப் பிரிவு நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பிரதேச செயலகமல்ல என நான் அறிகின்றேன். குறைந்த கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளுடன் ஒரு பிரதேச செயலகம் இருக்க வேண்டிய தேவையும் இல்லை. 7 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகத்தை ஓட்டமாவடி மேற்குப் பிரதேச செயலகத்துடன் இணைத்துவிட்டால் அவர்களுக்கான காணிப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு வரும் என்பதே என்னுடைய எண்ணப்பாடு.
 
எனவே நாங்கள் நான்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடம் இந்த விடயத்தில் உறுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் இதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் அவர்களுக்கு நாங்கள் என்றுமே பக்க துணையாக இருப்போம். வாகரைப் பிரதேசம் பிரிக்கப்படக் கூடாது. வாகரைப் பிரதேசம் சீரழிந்து போகக் கூடாது. அது இருந்த மாதிரியே அந்தப் பிரதேச செயலகத்தில் உள்ள மக்களும் அந்த நிலங்களும் அந்தப் பிரதேச செயலகத்தின் கீழேயே இருப்பதற்கு நாங்கள் அனைவருமாக ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts