ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் மீண்டும் இணைந்து செயற்படத் தயார் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பிலான உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாடியது.
இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கோ வாறான்ரா எனப்படும் யாதுரிமை எழுத்தானை மனு தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றது.
எனவே, வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் திட்டவட்டமான தீர்மானத்தினை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீர்ப்பை அடுத்து கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிப்பார் என தான் நம்புவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.