ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதால் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றி உறுதியாகிவிட்டது

(க.விஜயரெத்தினம்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றி உறுதியாகிவிட்டது என முன்னாள் அம்பாறை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதியின் பிரதம அமைப்பாளரும், கரையோரப்பிரதேச இணைப்பாளரும்மான பியசேன பெரும்புள்ளி ஹேவாகே தெரிவித்தார்.

அம்பாறை திருக்கோயில் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள்,பிரதிநிதிகள் பியசேனவை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை(12)சந்தித்து கலந்துரையாடினார்கள்.இதன்போது பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்குமாறு சந்தித்த பிரதிநிதிகளிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

இவ்வளவு காலமும் வேட்பாளரின் நிலையறியாமலும்,குணம் புரியாமலும் அவர்களின் சேவையின் தன்மை தெரியாமலும்,தேர்தலில் மனுத்தாக்கல் செய்யும் முன்னரே அவரை யார் என்றும் அறியாமலும்,எடுப்பார் கைப்பிள்ளை போல் வாக்களித்ததன் பாரதூரமான விளைவைத்தான் இப்பிரதேசம் இப்பொழுது பல விளைவுகளை  அனுபவித்துக் கொண்டிருக்கிறது.அம்பாறை மாவட்டத்திலே அபிவிருத்தியிலே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.அதற்கு உங்களைப்போன்ற ஏழை, எளிய மக்களின்  வாழ்விலே நிலையான வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.பல சகாப்தங்களாக அபிவிருத்திகள் அனைத்தும் நிர்மூலமாக காணப்படும் அபிவிருத்திகள் அனைத்தையும் உச்சம் தொடும் அளவிற்கு கட்டியெழுப்ப வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தான் உங்களை நாடி வந்துள்ளேன்.

வாக்களிக்கும் மக்கள் அனைவரும் முட்டாளாக்கும் ஒரு இடம் இருக்கிறது.அது தான் கட்சி தலைமையின் தன்மை அறியாமல்,கபடம் புரியாமல்  கட்சிக்கு வாக்களிப்பது.பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும்  பொழுதும் வேட்பாளரின் தன்மை தெரியாமல் கட்சி எனும் மாய வலையில் விழுந்தது தான் இந்த அவலங்களுக்கெல்லாம் மூல காரணமாகும்.

நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனயின் மஹிந்த ராஜபக்ச எனும் தலமை ஐப்பழுக்கற்றது,தாய் அன்புடன் எல்லோரையும் நேசிக்கதக்கதாகும். அரவணைக்கதக்கது.அதை நான் சொல்லி நீங்க தெரிய வேண்டியதில்லை உங்கள் அனைவருக்கும் புரியும்.நாட்டில் ஆட்சியில் இருக்கும் சூழ்சிக்காரர்களின் சதிதிட்டங்கள் மக்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல திடசங்கற்பம் பூண்டு செயற்படுகிறது.சிங்களவர்கள்,தமிழர்கள்,முஸ்லீம்கள் என இன,மதம்,மொழி,ஜாதி பேதங்களை கடந்து எமது தாய்நாட்டை கட்டிக்காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும்  நம் அனைவருக்கும் உள்ளது.

இந்த நேரத்தில் உன்னதமான கட்சியாம் நல்ல தலைவர்களின் கீழ் வழிநடத்தப்படும் கட்சியாம் இலங்கை மக்கள் அனைவரையும் ஒரு கண் கொண்டு பார்க்கும் கட்சியாம் நாட்டு  மக்களின் நலனே தனது நலன் என பெருமை கொள்ளும் தலைமையாம் இந்த சிறப்பெல்லாம் தன்னகத்தே கொண்ட  பொதுஜன பெரமுன கட்சியை நாம் முழுமனதோடு ஆதரிப்போம்.நாட்டிலே நல்லவைகளை அடைய பாடுபட்டு உழையுங்கள். அதற்காக நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் இறைவனுக்கு செய்யும் பிராத்தனையாக அமையும் என கூறுகிறார்கள்.அந்த வகையில் தான்  உங்களுக்கு நல்வழி காட்ட நல்லவற்றை எடுத்துக்கூற அதனால் விளைய போகும் நன்மைகளை தெளிவுபடுத்த கட்சியின் தலமையினால் இந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளேன்.அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கி நாட்டின் இறையாண்மை பாதிக்காமல் ஒன்றுபட்டு கோதபாய ராஜபக்ஷவை வெல்லச் செய்யுங்கள்.

நாடென்ன செய்தது நமக்கு என்று நீங்கள் கேள்விகள் கேட்பதற்கு முன்னர் முட்டாள்தனமாகவும், மடத்தனமாகவும் அறியாமையுடனும் மிக நீண்ட காலமாக சீரற்ற சிந்தனை திறனற்ற அறியாமையுடன் கட்சிகளை  ஆதரித்து என்ன பலனை நீங்க கண்டீர்கள்.இந்த நாடு அடைந்ததெல்லாம் அவலமே ஆகும்.அதனால் நமது நாட்டையும் நம்மையும் நமது பொருளாதாரத்தையும் நிர்மூலமாக்கியது தான் மிஞ்சியுள்ளது.

எனவே இதற்கெல்லாம் ஒரே ஒரு வழி மகா லஷ்மியின் கரங்களை அலங்கரிக்கும் செந்தாமரையின்  மொட்டுச்சின்னத்தை ஆதரிப்பதன் மூலம் எமது வாக்குகளால் அதை அலங்கரிப்பதன் மூலம் எமது நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் மலரச் செய்வோம்.அனைத்து பொதுமக்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக்குப்பின்னால் அணிதிரண்டு நாட்டை முன்னேற்ற ஒன்றுபடுங்கள்.

இன்று நமது சமுதாயத்தில் மாண்டுபோகும் மனித அன்பு அக்கறை ஆதரவினை மீட்டேடுப்போம்.பித்தலாட்டகாரர்களின் பசப்பு வார்த்தைகளை புறந்தள்ளி நமது மக்களின் பொன்னான வாழ்விற்கு வழிசமைப்போம்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியாகிவிட்டது.ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் வடகிழக்கில் உள்ள தமிழ்மக்கள் ரணிலை நிராகரிப்பார்கள்.இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு சொல்லும் பேச்சை தமிழ்மக்கள்,இளைஞர்கள்,யுவதிகள் நிராகரித்து வருகின்றார்கள்.தேசியம்,சமஸ்டி என்று தமிழ்மக்களை உசிப்பேற்றும் வெற்றுக்கோச அரசியலை இன்று வடக்குத் தலைமைகளால் நிராகரிக்கப்படுகின்றது.வடகிழக்கில் உள்ள இன்றைய இளைய சமுதாயம் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது.இளைஞர்,யுவதிகளின் ஏகோபித்த எதிர்பார்ப்பு வேலைவாய்ப்பு, பொருளாதாரம்,நிம்மதியான வாழ்க்கை வாழ்வதுதான்.சமஸ்டி,தேசியத்தை வெறுத்தொதுக்கின்றார்கள்.

தமிழ்மக்கள் நாட்டில் நிலவிய யுத்தத்தினால் பல்வேறான அழிவுகளையும்,நெருக்கடிகளையும் சந்தித்துள்ளார்கள்.ஆனால் அழிக்கப்பட்ட தமிழ்மக்களை பற்றியோ அல்லது தமிழர்களை வாழவைப்பது பற்றி சிந்திக்காமல் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடகமாடுகின்றது.தமிழ்தேசிய கூட்டமைப்பானது உண்மையாக தமிழ்மக்களின் மீது விசுவாசம் இருந்தால் எதிர்கட்சித் தலைவர் பதவியை வைத்துக்கொண்டு பல வேலைத்திட்டங்களை செய்திருக்கலாம்.அவ்வாறு ஏன் செய்யவில்லை.அவர்களும்,அவர்களது குடும்பம் மட்டும் வாழனும் என்ற சிந்தனை மட்டும்தான் உள்ளது.இன்று பார்த்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிள்ளைகள்,குடும்பத்தினர் உயர் பதவியில் வேலை பார்க்கின்றார்கள்.சிலர் ஐரோப்பாவில் உயர் அந்தஸ்துடன் வேலை பார்க்கின்றார்கள்.இந்த நிலைமையை மாற்றியமைக்க கோத்தபாயவை ஆதரிங்கள் எனத் தெரிவித்தார்.

Related posts